டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினமான நேற்று (ஜன.,26) டில்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக டில்லி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் மற்றும் பாரதிய கிசான் யூனியன் ஆகிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















