குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. அவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை என்பது இதில் தெளிவாகியுள்ளது.
பிலாஸ்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள திப்திபா கிராமத்தில் வசித்த நவ்னீத் சிங், அவர் ஓட்டிய டிராக்டர் விபத்தால் எற்பட்ட காயங்களால் இறந்தார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அல்ல என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில், தன் டிராக்டரை வைத்துக்கொண்டு நவ்னீத் சிங் சில ஸ்டண்டுகளை செய்துகொண்டிருந்தபோது அவரது டிராக்டர் கவிழ்ந்ததில் அவர் இறந்தார்.
உத்தரபிரதேசத்தின் பரேலி ராம்பூரில் உள்ள கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (ஏ.டி.ஜி) அவினாஷ் சந்திரா, ஏ.என்.ஐ யிடம், வைரலான வீடியோவில் காணப்பட்டபடி நவ்னீத் சிங்கின் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு அவர் பலியானார் என்று தெரிவித்தார்.
“நேற்று இரவு, மூன்று மூத்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனையில் புல்லட் காயம் பற்றி எதுவும் வெளிவரவில்லை. வைரலான வீடியோவில் காணப்பட்டபடி அவரது டிராக்டர் தலைகீழாக கவுழ்ந்ததில், அவருக்கு ஏற்பட்ட ஆன்டிமார்ட்டம் காயங்களால் அவர் இறந்தார். இறந்தவரின் இறுதிச் சடங்குகள் அவரது கிராமத்தில் அமைதியான முறையில் நடத்தப்பட்டன” என்று ஏ.என்.ஜி கூறியதாக ANI தெரிவித்துள்ளது.
நவ்னீத் சிங் புல்லெட் காயத்தால் இறந்தார் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக குடியரசு தினத்தன்று அமைதியான முறையில் நடத்தப்பட அனுமதி வழங்கப்பட்டிருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் தங்கள் பேரணியை துவக்க முயற்சித்ததும், டெல்லியின் பல இடங்களிலும் போராட்டம் செய்ய முற்பட்டதும் கடும் குழப்பத்துக்கும் வன்முறைக்கும் வழி வகுத்தது.
மத்திய தில்லியில் உள்ள ITO-வில், தடுப்புகளை உடைத்து, காவல்துறை வீரர்களை தாக்கி, காவல் துறை வாகனங்களை சூறையாடிய விவசாயிகளின் ஒரு குழுவின் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். விவசாயிகள் குழு செங்கோட்டையை அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டது.
விவசாயிகளின் போராட்டத்தின்போது, தில்ஷாத் கார்டன், செங்கோட்டை மற்று பல இடங்களில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.