2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்துக்கான (அக்டோபர் – செப்டம்பர்) கரும்பு பயிருக்கு உரிய நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25% அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது 10.25%க்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1% -க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை வழங்குகிறது. இந்த விகிதத்துக்கு குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1%-க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படுகிறது. இருப்பினும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், 9.5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்புக்கான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமுக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.அதில்,கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழகக் கரும்பு விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2015 – 16 ஆண்டுகளில் ₹2,300 ஆக இருந்த விலையை, கடந்த பத்து ஆண்டுகளில் ₹1,250 அதிகரித்து வழங்குகிறது நமது மத்திய அரசு.
ஆனால், தனது 2021 தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,000 வழங்கப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை கரும்பு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, கரும்பு ஒரு டன்னுக்கு ₹2,850 வழங்கியது மத்திய அரசு. மீதமுள்ள ₹1,150 விலையை சேர்த்து, விவசாயிகளுக்கு ₹4,000 ஆக திமுக அரசு வழங்கும் என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அமைச்சர்கள் பொய் கூறிக் கொண்டிருந்தார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ₹4,000 வழங்குவதாகக் கூறியது திமுக அரசு. தற்போது மத்திய அரசு கரும்பு ஒரு டன்னுக்கு, ₹3,550 வழங்குகிறது. இதனுடன் அந்த ₹1,150 சேர்த்து, ஒரு டன்னுக்கு ₹4,700 ஆக, கரும்பு விவசாயிகளுக்கு திமுக அரசு வழங்குவதுதான் நியாயம்.
ஒவ்வொரு ஆண்டும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் தமிழக விவசாயிகளை ஏமாற்றி வரும் திமுக அரசு, இதற்கு மேலும் தமிழக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது.என அவர் பதிவிட்டுள்ளார்.மேலும் கரும்பு ஆதர விலையை ஏற்றிய பிரதமர் மோடிக்கு விவசாயிகளை நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள் இது விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் திமுகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.