இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இருக்கும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும், அனைத்து சவால்களையும் ஒன்றிணைந்து தீர்ப்பதிலும் இந்தியா உறுதியுடன் உள்ளது என அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அன்னிய தலையீடும் தேவையற்றது என அவர் கூறினார்.
ஜம்மு ஐஐஎம்-ன் 3வது மற்றும் நான்காவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறியதாவது:
ஐஐஎம் ஜம்மு போன்ற தேசிய உயர்க் கல்வி மையங்கள், புதிய சந்தைகளின் நிலவரம், 4வது தொழில்புரட்சியின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் புதுமையான படிப்புகள் மற்றும் டிப்ளமோக்களை வழங்க வேண்டும்.
உலக நிலவரத்துக்கு ஏற்ப உயர் கல்வி மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த படிப்புகள் மூலமாக வேளாண்மை, வர்த்தகம், தொழில்நுட்பம், மானுடவியல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை ஒன்றிணைக்க வேண்டும். இதுதான் புதியக் கல்வி கொள்கையின் பன்முக உந்துதல்.
கடந்த காலத்தின் மேலோட்ட அணுகுமுறையால், எதிர்கால பிரச்னைகளை தீர்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதுமையை ஊக்குவிக்கும் மனநிலையை உருவாக்குவது முக்கியம்.
கல்வி நிறுவனங்களின் சீர்திருத்தம் மாணவர்களிடையே படைப்பாற்றலை வளர்க்க வேண்டும், சிறப்பம்சத்தை ஊக்குவிக்க வேண்டும். வேகமாக மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப, எதிர்காலத்தில் மேலாண்மை மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.
நிச்சயமற்ற உலகில் உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப உங்களின் சுறுசுறுப்பு ஆகியவை மிக முக்கியமானது.
கற்றல் உலகமும் பணியாற்றும் உலகமும் வேகமாக மாறிக் கொண்டிருப்பதால், எதிர்கால சவால்களை எதிர் கொள்வதில், கல்வி நிறுவனங்கள் சுறுசுறுப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மனித இனம் இதுவரை சந்திக்காத சூழல்களுக்கு ஏற்ப மாறவும், பதிலளிக்கவும் உயர் கல்வி நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள், மேலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள், புதுமைகளை அடிமட்ட அளவில் அடையாளம் காண வேண்டும். எல்லாவற்றுக்கு உள்நாட்டில் தீர்வு காணும் வகையில் தங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்த வேண்டும். நமது கைவினை கலைஞர்களின் பாரம்பரிய திறமைகளை அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும்.
விவசாயிகளுக்கு உதவி செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
விவசாய பொருட்கள் விற்பனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில், பட்டம் பெறும் மேலாண்மை மாணவர்கள் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இ-நாம் சிறந்த உபகரணம். இதை மேலும் மேம்படுத்த வேண்டும். அறுவடைக்கு பிந்தைய வசதிகளில், புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேண்டும்.
மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற, இந்தியா, சிறந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், இளைஞர்கள் தான் நமது நாட்டின் மிகப் பெரிய வளம் மற்றும் கூட்டாளி. அதிகளவிலான மக்கள் தொகையை கொண்டிருப்பதால், எதையும் சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.
திறன் மேம்பாடு, தரமான கல்வி ஆகியவை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அதனால் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் -கல்வி நிறுவனங்கள் இடையிலான இணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். உலகின் உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமே, மாணவர்கள் தங்கள் பாடங்களின் அடிப்படையில் திறமையானவர்களாக மாற முடியும். இளம் மாணவர்களின் புதிய கண்ணோட்டங்களால், நமது தொழில்துறையும் வெகுவாக பயனடையும்.
கல்வியை வழங்குவதில் தொழில்நுட்பத்தின் தேவையையும், ஆற்றலையும், கொவிட் தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது.
அதனால் தொழில்நுட்ப உபகரணங்களை இன்னும் விவேகமாக பயன்படுத்த வேண்டும். தொலைதூர பகுதிகளில் உள்ள பின்தங்கிய மாணவர்களும், இந்த தொழில்நுட்ப புரட்சியால் பயனடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் கூறினார்.