விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்படும் பிரதமர் கிஸான் திட்டத்தின் தவணை தொகையை பெற்று தருவதாக, ‘லிங்க்’ அனுப்பி, பண மோசடிக்கு முயற்சி நடப்பதாக, ‘சைபர்’ குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். மத்திய அரசு, நாடு முழுதும் உள்ள ஏழை விவசாயிகள் 9.26 கோடி பேருக்கு, பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, 6,000 ரூபாயை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துகிறது.
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடி, இந்த திட்டத்தின், 17வது தவணையாக, 2,000 ரூபாய் வழங்க, 20,000 கோடி ரூபாயை விடுவித்து, முதல் கையெழுத்திட்டார். ‘சைபர்’ குற்றவாளிகள், இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து, தவணை பெற்றுத் தருவதாக, மொபைல் போன்களுக்கு லிங்க் அனுப்பி, பண மோசடி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
இது குறித்து, மாநில ‘சைபர்’ குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பிரதமர் கிஸான் திட்டத்தின் பயனாளிகளை, தனி நபர்கள் தேர்வு செய்யவே முடியாது. உங்களிடம் நிலம் இருந்தால் போதும். அதற்கான ஆவணம், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை, தனி நபர்கள் கேட்டால் தர வேண்டாம். ‘சைபர்’ குற்றவாளிகள், மொபைல் போன்களுக்கு லிங்க் அனுப்பி, விவசாயிகளுக்கு தவணை தொகை பெற்றுத் தருவதாக, பண மோசடிக்கு முயற்சி செய்து வருகின்றனர். அப்படி ஏதாவது லிங்க் வந்தால், 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். தேவையற்ற லிங்க் எதையும், ‘கிளிக்’ செய்ய வேண்டாம். ஆதார் எண், ஓ.டி.பி., எண், வங்கி கணக்கு என, எந்த விபரத்தையும் தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.