சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அடர் சிவப்பு, மஞ்சள் நிறம் கொண்ட இருவண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதன்முதலாக இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து கொடியேற்றினார்.ஆகஸ்ட் 22, வியாழக்கிழமையான இன்று கட்சி தவெக கட்சி கொடி அறிமுகம் செய்தார் விஜய் இந்த நாளை தேர்வு செய்ததற்கு பின்னணியில் சில காரணங்கள் இருக்கிறது. இன்று சங்கடஹர சதுர்த்தி. நல்ல நேரம் காலை 10.45 முதல் 11.45 வரை. முழுமுதற் கடவுளான விநாயக பெருமானுக்கு உகந்த நாள். மேலும், சுப முகூர்த்தம் மற்றும் வாஸ்து நாளும்கூட. அதனால், இந்த நேரத்தில் தான் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதிகாரப்பூர்வமாக ஏற்றினார். இந்த நாளில் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் வெற்றியை கொடுக்கும். அதுவும் அரசியல் சங்கடங்கள் பல வரும் என்பதால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக இந்த நாளில் விஜய் தன்னுடைய கட்சி கொடியை அறிமுகம் செய்தார் மேலும் விஜயின் கொடியில் யானையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிள்ளையாருக்கு உகந்த நாளில் அவரின் உருவத்துடன் கொடியை சனாதன வழியில் அறிமுகம் செய்துள்ளார்.
அதன்பின்னர் விஜய் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கொடிப் பாடல் வெளியிடப்பட்டது. சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கலங்கிய கண்களுடன் விஜய் மற்றும் அவரது அருகில் அமர்ந்த புஸ்ஸி ஆனந்த் அதனை கண்டனர். தற்போது இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை விஜய்க்கு திரையுலகில் ’ஆளப்போறான் தமிழன்’, ’மெர்சல் அரசன்’, ’ஒருவிரல் புரட்சி’, ’சிங்கப்பெண்ணே’ உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தந்த பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். பின்னணி பாடகர் தீபக் பாடியுள்ளார்.
போர்களத்தில் யானையில் இருப்பவர்கள் தமிழகத்தில் ஆண்ட ஆளும் ஆட்சியாளர்கள் வீரர்களை (மக்களை) அடித்து விரட்டும் காட்சிக்கிடையே, குதிரையில் ஒரு வீரர் (விஜய்) கொடியுடன் வர, “வரமே வரமே வா வா நிஜமே… தலைவா தலைவா காவல் தர வா’ என பாடல் தொடங்குகிறது.
அப்போது வீரனுக்கு பின்னால் வரும் இரண்டு சாம்பல் நிற யானைகள், மக்களை அடித்து விரட்டும் யானைகளை முட்டி தள்ளி மண்ணில் வீழ்த்துகின்றன.தொடர்ந்து ’வெற்றிக்கழக கொடியேறுது… மக்கள் ஆச நெஜமாகுது’ என குரல் ஒலிக்க, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி கம்பத்தில் ஏற்றப்படும் காட்சி விரிகிறது.
இவ்வாறு பாடலின் தொடக்கத்தில் விஜயின் அரசியல் பிரவேசம் உருவகமாக காட்டப்படுகிறது.
தொடர்ந்து, ’தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது… மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது” என பாடல் வரிகள் இடம்பெறுகின்றன.
அப்போது முன்னாள் தமிழக முதல்வர்களான எம்ஜிஆர், அண்ணா ஆகியோருடன் விஜய் புகைப்படம் இருக்கும் காட்சி வருகிறது.அதன்பின்னர் வரும் முதல் சரணத்தில், ’சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய் ஏன் அரசியலுக்கு வருகிறார்?’ என்பதை வர்ணிப்பது போன்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
”சிறுசும், பெருசும் ரசிக்குது,
சிங்க பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள் கொடியில்
மொளச்ச கொடியும் பறக்குது
மனசில் மக்கள வைக்கும்
தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சி
ஆடிப்பாடி கூப்புடுது
சிகரம் கெடச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு
நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது
தமிழா தமிழா நாம வாழப்போறோமா
ஒரு கறையில்லாத கையபுடிச்சி போகப்போறோமேதொடர்ந்து கொடியின் நிறம், அதில் உள்ள ஒவ்வொன்றுக்குமான விளக்கத்தையும் அளிக்கும் விதமாக இரண்டாம் சரணத்தை அமைத்துள்ளார் விவேக்.
”ரத்த செவப்பில் நெறமெடுத்தோம்
ரெட்ட யானை பலம் குடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழுணர்வ
உருவிக் கொடியில் உருக் கொடுத்தோம்.
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்
பச்ச நீலம் திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம்
சிங்கம் வர்றத பறையடிச்சோம்.
தூரம் நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது
அரசர கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி” என்று பாடல் வரிகள் நீள்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களில் அதிக பார்வைகளை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.கொடிக்கான விளக்கமாக கொடிப்பாடல் வந்தாலும், கொடிக்கு பின்னால் சுவாரசியமான வரலாறு இருக்கிறது என விஜய் கூறியுள்ளதால் அப்போது மேலும் பல தகவல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.