சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.,வின் சரப்ஜித் கவுர் வீழ்த்தினார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் சமீபத்தில் 35 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 27ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன.இதில் முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வெற்றிபெற்றது.
12 இடங்களை பா.ஜ., கைப்பற்றியது. காங்., கட்சி 8 இடங்களிலும், அகாலி தளம் ஒரு இடத்திலும் வென்றன.முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்., கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் ஹர்பிரீத் கவுர் பாப்லா பா.ஜ.,வில் இணைந்தார்.இந்நிலையில் சண்டிகரின் மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடந்தது.
இதில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட மாநகராட்சி கவுன்சிலர் சரப்ஜித் கவுர், 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆம் ஆத்மியின் அஞ்சு காத்யல் 13 ஓட்டுகள் பெற்றார். ஆம் ஆத்மி கவுன்சிலரின் ஒரு ஓட்டு செல்லாது என அறிவிக்கப் பட்டது.இதில் மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினரான, சண்டிகரின் பா.ஜ., – எம்.பி., கிரண் கேருக்கும் ஓட்டளிக்க உரிமை வழங்கப்பட்டது. அவர் அளித்த ஓட்டுடன், 14 ஓட்டுகள் பெற்று, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆம் ஆத்மியை பா.ஜ., வீழ்த்தியது.