திருவட்டீஸ்வரர் கோவிலில் பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக வெளியான பத்திரிகையால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அத்திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.சென்னை, திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வரர் ஆலயத்தில் வரும் ஜூன் முதல் தேதி தி.மு.க., மகளிர் அணி, வட்ட துணை செயலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக பத்திரிகை ஒன்று வெளியாகி இணைய தளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, ஹிந்து அமைப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து கோவிலில் கிறிஸ்தவ திருமணம் நடத்தக் கூடாது என, அறிக்கை வெளியிட்டனர்.இத்தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர், திருமணம் நடத்த இருந்த குடும்பத்தாரை விசாரணைக்கு அழைத்து, பத்திரிகை குறித்து கேட்டனர்.அதற்கு திருமணம் செய்து கொள்பவர்கள் ஹிந்து மதத்தவர்கள்தான் என விளக்கம் அளித்து, கடிதம் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் அந்த திருமணத்திற்கு அனுமதி மறுத்து, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கோவில் செயலர் அலுவலர் கங்காதேவி, திருமணம் செய்து் கொள்ளும் குடும்பத்தாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள், வரும், ஜூன் மாதம் முதல் தேதி கோவிலில் திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளீர்கள். ஆனால், வேற்று மத முறைப்படி திருமண அழைப்பிதழ் அச்சடித்துள்ளீர்கள்.எனவே, கோவிலில் இந்த திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், இந்த திருமணத்திற்காக நீங்கள் செலுத்திய கட்டணம் நன்கொடையாக கருதப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















