திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்தார். திருமலை அன்னமய பவனில் பக்தர்களிடம் குறைகள் கேட்டுக்கு நிகழ்ச்சி நடந்தது.
அதில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று கூறியாதாவது :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் முடிந்ததும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் வாகன சேவைகளை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பக்தர்கள் கேலரிகளில் அமர்ந்து சாமி தரிசனம் செய்யலாம். செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து 6.15 மணி வரை மீன லக்னத்தில் கொடிேயற்றம் நடக்கிறது. கொடிேயற்ற நிகழ்ச்சியில் மாநில அரசு சார்பில் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி மூலவருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவையும் தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி மரத்தேேராட்டம், 5-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந்தேதி திருப்பதியில் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கிய பத்மாவதி குழந்தைகள் இருதயாலயாவில் இதுவரை 490 இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இங்குள்ள மருத்துவர்கள் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இங்கு இலவச மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் குழந்தைகள் தொடர்பான அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில் பத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 2 ஆண்டுகளில் முடியும். வகுலமாதா கோவிலின் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு தரிசன அனுமதியும் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.