சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதில் மதுபான விற்பனை, வரவு மற்றும் செலவு விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரித்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பைனான்ஸ் தொழில் செய்து வரும் தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.வடபழனி, வஉசி தெருவில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் அசோக் நகர், வர்கீஸ் அவென்யூ என்ற முகவரியில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 5 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அதேப்போல் வடபழனி, துரைசாமி சாலை அருகே தொழிலதிபர் ஒருவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வேப்பேரி பகுதியில் பைனான்ஸ் அதிபர் ஒருவர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 4 இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சோதனை குறித்து முழுமையான தகவல் ஏதும் அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.இந்த சோதனையானது முறைகேடு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையிலா? அல்லது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார் அடிப்படையிலா? என்பது குறித்து முழுமையான விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















