திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை ₹3.70 கோடியை தாண்டியது

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

இந்த அண்ணாமலையார் கோயிலில்,பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி,அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று நடந்தது.

கோயில் இணை ஆணையர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கோயில் உண்டியலில் ₹3 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 526ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 230 கிராம் தங்கம், 1 கிலோ 140 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதோடு, கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் 1.50 லட்சம் பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, கடந்த சில மாதங்களாக வழக்கத்தைவிட உண்டியல் காணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version