பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களை திருத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் மூன்று மசோதாக்களை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட மூன்று மசோதாக்களும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எந்த மூன்று சட்டங்களில் திருத்தம் :
ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம்,
சி.ஆர்.பி.சி. எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம்,
ஐ.இ.சி. எனப்படும் இந்திய சாட்சிகள் சட்டம்
பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களின் பெயர் :
பாரதீய நியாய சன்ஹிதா எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா;
பாரதீய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனப்படும் இந்திய மக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா;
பாரதீய சாக்ஷ்யா எனப்படும் இந்திய சாட்சிகள் மசோதா
இது குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் பேசியதாவது :
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரியமாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் நீதி விரைவாக கிடைக்கும் வகையில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது . இந்த புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், குற்றவியல் நீதி அமைப்பு புத்துயிர் பெறும். வழக்குகளில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும்.
இந்திய நீதித்துறை சட்ட மசோதாவில், தேச துரோக சட்டத்தை ரத்து செய்யும் விதிகள் உள்ளன. கும்பல் படுகொலைகள், சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத் தரவும் இம்மசோதா வழி செய்கிறது.இந்த மசோதாக்கள், நம் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த சபையில் என்னால் உறுதிபட கூற முடியும்.
இந்தியாவை அடிமைப்படுத்தவும், தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவுமே ஆங்கிலேயர்கள் குற்றவியல் தண்டனை சட்டங்களை கொண்டு வந்தனர். அதை தான் நாம் இன்று வரை பின்பற்றி வருகிறோம். ஆனால், இந்த புதிய மசோதாக்களின் நோக்கம் தண்டனை வழங்குவதல்ல; நீதி வழங்குவதையே நோக்கமாக வைத்து இயற்றப்பட்டுள்ளது.
பழைய சட்டங்களை மாற்றி, இந்த மூன்று புதிய மசோதாக்களை நிறைவேற்றுவதன் வாயிலாக, நம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும்.
இந்திய ஜனநாயகத்தின் 70 ஆண்டு கால அனுபவத்தில், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட நம் குற்றவியல் சட்டங்களை விரிவாக மறு ஆய்வு செய்து, மக்களின் சமகாலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
- இந்த புதிய சட்டங்களின்படி, வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். நிலைமைக்கு ஏற்ப, கால அவகாசத்தை மேலும், 90 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டிக்கலாம். போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்து, 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
- திருமணம், வேலை, பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக அல்லது அடையாளத்தை மறைத்து, பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்படும்.
- கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு, 20 ஆண்டுகள் சிறை முதல், ஆயுள் தண்டனை வரை விதிக்க, இந்த சட்டங்கள் வழி செய்கின்றன. அதுவே, சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை விதிக்கவும் விதிகள் உள்ளன.
- கும்பல் படுகொலைகளுக்கு, ஏழு ஆண்டு முதல், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வரை விதிக்க வழி உள்ளது.
- இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது. எனவே, தேச துரோக சட்டம் முற்றிலுமாக நீக்கப்படும்.
- பயங்கரவாதம் என்பது, முதல் முறையாக சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் இணையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதியின் சொத்துக்களை முடக்க, இந்திய நீதித்துறை சட்ட மசோதா வழி செய்கிறது.
- அரசு வழங்கும் தண்டனை தள்ளுபடியை, அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மட்டுமே மாற்ற முடியும் என்றும், ஆயுள் தண்டனையை ஏழு ஆண்டுகளுக்குள் மட்டுமே குறைக்க முடியும் என்றும், புதிய விதிகள் இயற்றப்பட்டுள்ளன.
- வழக்குகளில் தண்டனையை அதிகரிக்க, தடயவியல் அறிவியலை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனை விகிதத்தை 90 சதவீதம் ஆக்குவதே இந்த மசோதாக்களின் நோக்கம்.இந்த மூன்று புதிய மசோதாக்களை, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.