இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தேர்தல் காலங்களில் முழுமையான அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது யார் இந்த ஞானேஷ்குமார் என்ற விவாதம் கிளம்பியுள்ளது. 1964 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் பிறந்தவர் ஞானேஷ்குமார். உயர் கல்வியை முடித்த பின், கான்பூரில் ஐ.ஐ.டி.யில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் படித்தார். அதன் பின் அவர் ICFAI எனப்படும் Institute of Chartered Financial Analysts of India இல் பிசினஸ் ஃபைனான்ஸ் பட்டம் பெற்றார். பின் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் படித்தார்.
உலகளாவிய அறிவு பெற்ற ஞானேஷ்குமார், 1988 ஆம் ஆண்டு கேரளா கேடரில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். அவர் கேரள அரசாங்கத்தில் எர்ணாகுளத்தின் உதவி ஆட்சியராக முதலில் பதவி வகித்தார். பின் அடூர் துணை ஆட்சியர், கேரள மாநில SC/ST மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சியின் ஆணையர் மற்றும் பிற பதவிகளை வகித்துள்ளார். 2003 இல் கொச்சியில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
அதன் பின் கேரள மாநில அரசின் நிதித்துறை, பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். அதன் பின் மத்திய அரசுப் பணிக்குத் திரும்பினார்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2007 முதல் 2012 வரை இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக பதவி வகித்தார். அதன் பின் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தார். நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றினார். அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தபோது உள்துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றினார் ஞானேஷ்குமார்.
அமித் ஷாவின் கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்து கடந்த 2024 ஜனவரி 31 ஆம் தேதி பணி ஓய்வுபெற்ற ஞானேஷ்குமார், ஒரே மாதம் கழித்து அதாவது 2024 மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டார். இப்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.காஷ்மீர் 370 ரத்து செய்யப்பட்டதில் முக்கிய பங்கு! பாஜகவின் மூன்று முக்கிய முழக்கங்களில் ஒன்றான காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதில் டிப்ளமேட்டிக்காக முக்கிய பங்கு வகித்தவர் ஞானேஷ்குமார்.
உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் காஷ்மீர் டிவிஷனுக்கு தலைமை அதிகாரியாக அப்போதைய இணைச் செயலாளர் ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார். காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாகவும், அதன் பிறகான காஷ்மீரின் மறு உருவாக்கம் தொடர்பாகவும் டிராஃப்ட் தயாரித்ததில் ஞானேஷ்குமாரின் பங்கு முக்கியமானது. அந்த சட்ட மசோதாவைத்தான் 2019 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.
காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்ட பின்னரும் அந்த மாநிலம் தொடர்பான விவகாரங்களை உள்துறை அமைச்சகம் சார்பில் கையாண்டு வந்தவர் ஞானேஷ்குமார்தான்.ராமர் கோவில் கட்டுவதில் ஞானேஷ்குமாரின் ரோல் இந்த நிலையில் 2019 நவம்பர் 9 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு டிரஸ்ட் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டது. அந்த டிரஸ்டிடம்தான் ராமர் கோவில் கட்டும் நிலம் ஒப்படைக்கப்படும், தகுதியானவர்களை டிரஸ்டிகளாக நியமித்து கோவில் கட்டுமான பணிகளை முழுக்க முழுக்க அந்த டிரஸ்டேதான் கவனிக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது காஷ்மீர் 370 ரத்துக்கு அடுத்து, பாஜகவின் இரண்டாவது கனவுத் திட்டம்.அந்த வகையில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கான டிரஸ்ட் அமைக்கும் பணிகளை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று மோடியும், அமித் ஷாவும் ஆலோசித்தபோது அமித் ஷா கூறிய பெயர், ‘ஞானேஷ்குமார்’.
ஞானேஷ்குமாருக்காக அமித் ஷா போட்ட அரசாணை!
இதன் அடிப்படையில் 2020 ஜூன் 11 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் தனது இரு உட்பிரிவுகளை மறு சீரமைப்பு செய்து உத்தரவிட்டது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு 1, உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு 2 என பிரிவுகள் இருந்தன.காஷ்மீர் விவகாரங்கள் பிரிவு 1 இல் இருந்தன. அயோத்தி விவகாரங்கள் பிரிவு 2 இல் கவனிக்கப்பட்டன. ஞானேஷ்குமார் காஷ்மீர் பிரிவை உள்ளடக்கிய பிரிவு 1 இன் தலைமை அதிகாரியாக இருந்த நிலையில், அயோத்தி விவகாரங்களை கையாண்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு-II, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு-I உடன் இணைக்கப்பட்டது. அதாவது அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான டிரஸ்ட் அமைக்கும் பணியை ஞானேஷ்குமாரிடம் ஒப்படைப்பதற்காக உள்துறையிலேயே மாற்றங்களை செய்து அரசாணை பிறப்பித்தார் அமித் ஷாஅமித் ஷாவின் ஆலோசனைப்படி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்குவது முதல் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவரை செயலாற்றினார் ஞானேஷ்குமார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இவர் கையில்தான்!இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் இரு கனவுத் திட்டங்களான ஜம்மு காஷ்மீர் 370 ரத்து, அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் என இரண்டையும் நிறைவேற்றுவதில் உறுதுணையாக செயல்பட்ட ஞானேஷ்குமார்தான், இப்போது இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையாளர். இவரது தலைமையின் கீழ்தான் இந்த ஆண்டு பிகார் சட்டமன்றத் தேர்தல், 2026 இல் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.