மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் அமித் ஷா சைலன்ட் ஆபரேஷன் செய்துப் போகிறார் என்று பேசினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் இன்னொரு சர்தார் வல்லபாய் படேல் அமித் ஷா என பேசத் தொடங்கிய நயினார் நாகேந்திரன், அமித் ஷா தமிழகத்தில் சைலண்ட் ஆபரேஷன் செய்யப்போகிறார் என்று கூறினார்.
மேலும் அவர் பேசியபோது, “அமித் ஷா அவர்கள் தமிழகத்திற்கு வந்து மதுரை மீனாட்சியை தரிசித்துவிட்டு, அந்த செந்தூரை எடுத்துக்கொண்டு தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுகவை அழிக்க சைலன்ட் ஆபரேஷன் செய்யப் போகிறார்.யார் அந்த ஷா? என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்கிறார். ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டுவந்தவர் இந்த ஷா. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கி, அங்கு பாஜக ஆட்சியை கொண்டுவந்தவர் இந்த ஷா. ஷா என்ற பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம். தோல்வி பயத்தில் கூட்டணி குறித்து பேசுகிறார்கள்.
இந்திரா காந்தி அம்மையார் மதுரைக்கு வந்தபோது அவர்மீது கல்லைவீசி தலையில் ரத்தம் வந்தது. அவரைப் பார்த்து விமர்சித்தனர். அவர்களுடன் இப்போது கூட்டணி வைத்திருக்கின்றனர். ஆனால் அதிமுகவுடனான எங்களுடைய கூட்டணியைப் பார்த்து துரோக கூட்டணி என்கின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அமித் ஷா இங்கு வந்து கூட்டணியை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். இப்போது மீண்டும் இங்கு வந்திருக்கிறார். பொய், புரட்டிலேயே மக்கள் நம்பும்படி வாழ்வது எப்படி? என்பதுதான் திமுக ஆட்சி. சட்டம்-ஒழுங்கு இங்கு சரியில்லை. தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் சரியாக நிர்வாகம் செய்கிறாரா? அதற்கான விடிவுகாலம் அமித் ஷா.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனவும், எல்லா கிராமங்களிலும் மது பழக்கவழக்கங்கள், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக அமித் ஷா சொன்னார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகாரளிக்கப் போன பெற்றோர் மீதே வழக்குப்போட்டதுதான் திமுக அரசு. இதற்கு 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கிற பொதுத் தேர்தலில் நிச்சயம் முடிவு இருக்கும். அதற்காக அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைக்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைத்திருக்கும் இந்த கூட்டணி கருத்துக்களை தவிர்த்து கொள்ளலாம். ஏனென்றால் இது அமித் ஷா அவர்கள் ஏற்படுத்திய கூட்டணி பொருந்திய கூட்டணி. ஏற்கெனவே நம்மோடு இருந்த கூட்டணி. பாஜக ஒன்றும் சாதாரண கட்சியல்ல. அதேபோல் இருந்தாலும் வாழ்ந்தாலும் பெயர் சொல்கிற எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்தே தீரும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது” என்று பேசினார்.
தமிழக மக்கள் நிம்மதியாக இல்லை: கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ” 11 ஆண்டுகளில் நாம் செய்து இருக்கிற முக்கிய சாதனை, 2012 ல் 180 ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டியவர் சதவீதம் 16.25 சதவீதம். 2026 ல் அது பாஜக ஆட்சியில் 2.25 சதவீதமாக குறைந்து இருக்கிறது. ஆனால் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்படவில்லை.இன்று தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக இல்லை. மத்திய அரசின் திட்டங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி, நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சி நடத்தி இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து சினிமா தயாரிக்கும் தம்பிகள் அதிகரித்து இருக்கிறார்கள். என நயினார் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.