சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என பாஜக மூத்த தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்கு வங்கி அரசியல் தொடரும். ஐந்து ஆண்டுகளில் பூபேஷ் பாகேல் என்ன செய்தார் என்று நான் கேட்க விரும்புகிறேன். சத்தீஸ்கரில் பாஜ., ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம். டிசம்பர் 3ம் தேதி சத்தீஸ்கரில் தாமரை மலரும். வரவிருக்கும் சட்டசபை தேர்தல் ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு தலைவரையோ தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. இது பிரதமர் மோடியின் தலைமையில் தங்க சத்தீஸ்கரை உருவாக்குவதற்கான தேர்தல்.
பூபேஷ் பாகேல் அரசு பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. மின்கட்டணத்தை பாதியாக குறைப்பதாக உறுதியளித்தனர். தேர்தலுக்கு பிறகு என்ன நடந்தது?. ஓபிசி, ஆதிவாசி, பெண்கள், விவசாயிகள் என எவரும் மகிழ்ச்சியாக இல்லை. காந்தி குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.