படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகர் சூர்யாவுக்குபாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் காட்டமான கடிதம் எழுதியுள்ளார்.
அன்புள்ள நடிகர் சூர்யா அவர்களுக்கு
வணக்கம்!
தமிழ்த்திரையுலகில் இளம் நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். அனைவரும் நேசிக்கும் கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் சிவக்குமார் அவர்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தாங்களும், சகோதரர் கார்த்தியும் தமிழ்த் திரையுலகில் முன்னேறி வருகிறீர்கள்.
தங்களின் தயாரிப்பில், தங்களைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள ‘ஜெய்பீம்’ என்ற தலைப்பிலான திரைப்படம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் மேலோங்கியுள்ள நிலையில், தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது.
அடக்குமுறை யார் மீது கட்டவிழ்க்கப்பட்டாலும், அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை.
திரைப்படம் என்பது அழகையும், கலையையும் அவற்றுடன் கலந்து சமூகத்திற்குத் தேவையான நல்லக் கருத்துகளையும் வெளியிட வேண்டிய சிறந்த ஊடகம் ஆகும். ஆனால், ஜெய்பீம் திரைப்படத்தில் அத்தகைய சிறப்பு மிக்க ஊடகம் வன்மத்தை வெளிப்படுத்தவும், அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சியுள்ளவர்களால் ஏற்க முடியாதது.
‘ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு பல ஐயங்கள் உள்ளன. அவர்களின் நியாயமான ஐயங்களைப் போக்க அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும்.
அந்த வினாக்கள்:
- ‘ஜெய்பீம்’ உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தானா?
- உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றால், உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த முதனை கிராமமா? அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?
- உண்மை நிகழ்வில் முதனை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த இராஜாக்கண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்து படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்குத் தெரியுமா? இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் ஜெய்பீம் திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது.
- இராஜாக்கண்ணுவை படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு இராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜிக்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குனரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?
- காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட இராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும் போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்?
- கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்?
- படைப்பாளிகளில் இருவகை உண்டு. ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை (Controversy) எழுப்பி, அதைப் பேசு பொருளாக்கி, அந்த விளம்பரத்தில் திரைப்படத்தை ஓட வைக்க முயல்பவர்கள். இவற்றில் எந்த வகையில் உங்களைச் சேர்ப்பது?
- ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி…. அம்பேத்கரியத்துக்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்று கற்பிக்கவில்லை. ஆனால், ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இது தான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா?
- இராஜாக்கண்ணுவின் படுகொலை குறித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தங்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், இராஜாக்கண்ணுவின் படுகொலைக்காக மற்ற கட்சிகளை இணைத்து முதலில் போராட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 42 ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, உரிமைகளை வென்றெடுத்துத் தந்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாதா?
கலைகள் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். கலைகளின் சிறந்த வடிவங்களில் ஒன்றான திரைப்படம் மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டும். மாறாக, வன்மத்தை விதைக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக திரைப்படங்கள் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தக் கூடாது.
நீங்கள் விரும்பினால் பெருமைமிக்க உங்களின் கவுண்டர் சமுதாயத்தை போற்றும் வகையில் திரைப்படம் தயாரித்து வெளியிட்டுக் கொள்ளலாம். மாறாக இன்னொரு சமுதாயத்தை, படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை. இதை உங்களுக்கு மட்டுமல்ல. இன்னொரு சமுதாயத்தை இழிவுபடுத்தி தங்களின் சாதிவெறிக்கு தீனி போட நினைக்கும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை கொச்சைப் படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்குவது வாடிக்கையாகி விட்டது. இது படைப்பு சுதந்திரம் அல்ல. வெறுப்பு மனப்பான்மை. படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடாத முதல் குணம் இது தான்.
தமிழ்த்திரையுலகில் தனி மனிதர்களைத் தாக்கியும், சமூகங்களை இழிவுபடுத்தியும் பல நேரங்களில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் அல்லது அவர்களின் தவறு சுட்டிக்காட்டப்பட்டவுடன் அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டிருக்கின்றனர். இது தான் அடிப்படை மனித குணம். மனிதர்கள் தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.
ஆனால், ஜெய்பீம் திரைப்படம் உங்களை புனிதராகக் காட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக பொதுமக்களும், இளைஞர்களும் கொந்தளித்த பிறகும், படக்குழுவினரின் தவறுகளை நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டிய பிறகும் கூட, தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு ஒரு வாரமாக நீங்கள் கடைபிடித்து வரும் அமைதி ஆபத்தானது.
படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை.
கலைக்கும், உங்களின் படைப்புக்கும் நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், உங்களை நோக்கி மேலே எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அது தான் மக்களின் கோபத்தை தணிக்கும். மிக்க நன்றி!
இவ்வாறு தனது கடிதத்தில் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.