தி.மு.க.வில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள், எந்த காலத்திலும் தலைவராக முடியாது,” என்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உதயநிதியை நேரடியாக விமர்சனம் செய்தார்.
தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், நேற்றைய தினம் நடைபெற்றது. வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பங்கேற்றார்.
சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில், பா.ஜ.க வெற்றிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தையும்அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, செயற்குழு கூட்டத்திற்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பா.ஜ.,க தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சமுதாயத்தில் நெருக்கமாக பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு. வழக்கறிஞர்களுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில், பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தே தீரும்.இது காலத்தின் கட்டாயம் தீயினால் சுடப்பட்டு, சமுதாயத்தினால் அசிங்கப்படுத்தப்பட்டு, தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே, பெரிய தலைவர்களாக வர முடியும்.
அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. தி.மு.க.,வில், பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாரும் தலைவராக முடியாது.வரும் 2024ல் இந்தியா ஒரே கட்சியை, அதாவது பா.ஜ.க வை நோக்கி சென்று கொண்டிருக்கும். 2024ல், 400 எம்.பி.,க்களை, பா.ஜ., பெறப் போவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
சுயநலத்திற்காக தலைவர்கள் இருப்பதை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களது வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி, உங்களை தேடி வரும்.இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















