இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர் அண்ணாமலை ஆவேசம்.

சென்னையில், தமிழக பாஜக சார்பாக, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், கடுமையாக உழைத்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், பெருமளவில் வாக்களித்த சென்னை மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியில், தமிழகம் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த எட்டு ஆண்டுகளில், தமிழகம் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்படும். உத்திரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் திமுக அரசு, ஒரு குடும்பத்துக்காக மட்டுமே சிந்தித்து வருகிறது.

உதயநிதி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டுமென்று, திமுக அமைச்சர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான், அவர்கள் தங்கள் வாரிசுகளைப் பதவியில் அமர்த்த முடியும். இதுதான் திராவிட மாடல்.

அமரர் சோ அவர்கள், தமிழகத்தில் இந்துக்கள் எழுச்சி ஏற்படும்போது, திமுக பால்காவடி எடுக்கும் என்று கூறினார். இன்று திமுக பழனியை நோக்கிப் படையெடுக்கிறது. பழனி முருகன் அசாதாரணமான கடவுள்.

ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகப் பெருமான், அரசியலுக்காகப் பயன்படுத்தினால், மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவார். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று கடந்த ஆண்டு சொன்னவர்கள், இன்று பழனிக்குப் பால் காவடி எடுக்கிறார்கள். இதனைத் தமிழ்ப் பண்பாடு என்று கூறுகிறார்கள். பெரியார் ஆட்சி என்று கூறுகிறார்கள். பெரியார், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான நமது திருவள்ளுவரை,

தொல்காப்பியரை, கம்பரை எல்லாம் தவறாக விமர்சித்தவர். கடந்த எழுபதாண்டுக் காலமாகத் தமிழ்க் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களுக்கு, ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகப் பெருமான் நிச்சயம் அதற்கான தண்டனையைக் கொடுப்பார்.

என்னைப் பொறுத்தவரை, திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளையும் அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும். அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதிமுகவின் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், என்னைக் குறித்துப் பேசியிருக்கிறார். அன்றைய அமைச்சர் ஒருவரின் துணையால் கொலை வழக்கிலிருந்து தப்பித்தவர், எனக்கு நேர்மை, நியாயம் குறித்துப் பாடம் நடத்த வேண்டாம். புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோரின் கட்சியை, கூவத்தூரில் திரு. எடப்பாடி பழனிசாமி நடத்திய விதம், அலங்கோலம் என்பதை அவரால் மறைக்க முடியாது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, காலில் விழுந்து பதவி வாங்கிய அவருக்கு, காவல்துறையில் நேர்மையாகப் பணி செய்த விவசாயியின் மகனான என்னைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? வரும் 2026 தேர்தலில், திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு நான்காவது இடம் கூடக் கிடைக்காது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். அதற்கான மரியாதையை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் எப்போதும் கொடுக்கத் தவறியதில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு, கலைஞர் அவர்களைச் சந்திக்கச் சென்னை வந்த நமது பிரதமர் அவர்கள், டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு ஓய்வெடுக்க வருமாறு அன்போடு அழைத்திருந்தார்.

அது நமது நாகரிகம். அரசியல் எதிர்ப்பு எப்போதும் நிச்சயமாக இருக்கும். திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணிக்குப்வராது என்பதை என்னால் உறுதியுடன் சொல்ல முடியும். தமிழக பாஜக தொண்டர்களின் உணர்வுக்கு, நமது தலைமை எப்போதும் மரியாதை கொடுக்கும். காங்கிரஸ் கட்சி போலத் தொண்டர்களை மதிக்காத கட்சி அல்ல நமது பாஜக. அதனால் நாம் தொடர்ந்து நமது பணிகளைத் தொடருவோம். திமுக அரசின் சீர்கேடுகளை மக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்வோம்.

அடுத்த ஐந்நூறு நாட்களும் நாம் தொடர்ந்து கடுமையாக உழைப்போம். திமுக அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பாமல், 60 – 70% பொதுமக்கள் நேர்மையான அரசியலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்று சக்தியாக நாம் உருவாகியிருக்கிறோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் படி. உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து இடங்களிலும் நாம் போட்டியிடுவோம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 68,045 பூத்களில் 7,174 பூத்களில் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலிடத்தைப் பிடித்தது. 18,086 பூத்களில் நமது கூட்டணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத கூட்டணியை அமைத்து, தமிழகத்தில் 37 சதவீத பூத்களில், நாம் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்,

நாம் அரசியல் கட்சி என்ற நிலையில் இருந்து, ஆளத் தகுதியான கட்சி என்ற நிலைக்கு உயருவோம். தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில், ஒரு கோடி பேரை பாஜக
உறுப்பினராக இணைப்போம். நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நமது பாரதப் பிரதமர் அவர்களுக்கு அரணாகத் தொடர்ந்து உழைப்போம். என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Exit mobile version