கோவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை.

கோவை மாநகரில் நடைபெற்ற தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அஸோசியேஷன் அமைப்பின், புதிய நிர்வாகிகள் பங்கேற்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் குடும்ப விழா என, முப்பெரும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில் கொரோனா காலகட்டத்தில், ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அஸோசியேஷன் அமைப்பின் சார்பாக, தொழிலாளர்களுக்குச் செய்த உதவிகள் அனைத்தும் மிகவும் பாராட்டுக்குரியவை. விழாக்கள், பொதுக்கூட்டங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், எனப் பொதுமக்கள் அதிகமாகப் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்யும் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் இந்த ஹயர் கூட்ஸ் நிறுவனங்களை நடத்துபவர்களின் முக்கிய கோரிக்கைகளை

தமிழக பாஜக சார்பில் முன்னெடுத்துச் செல்வோம். அதோடு மட்டுமல்லாமல்,

தமிழக பாஜக மத்திய அரசு நலத்திட்டப் பிரிவின் சார்பாக, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியையும் அளிக்கிறேன். ஒரு குடும்ப விழாவாக நடைபெறும் இந்த விழாவில், குழந்தைகளும் பங்கேற்றிருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் குழந்தைகளைச் சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் சிக்கலான, ஆபத்தான சூழலில், தொழிலாளர்கள் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். குழந்தைகள் அனைவரும் நன்கு படித்து, சிறந்த மனிதர்களாக உருவாகும்போதுதான், உங்கள் தந்தை தாய்மார்களின் கடினமான உழைப்புக்கு நியாயம் செய்ய முடியும்.

மக்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலைதான் தற்போது இருக்கிறது. யாரோ ஒருவர் தங்கள் பணியைச் செய்யத் தவறுவதால், பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். லஞ்சம், ஊழலைத் தாண்டி, மாற்றம் வேண்டும் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கினால் மட்டும்தான், சமுதாயத்தில் மாற்றம் வரும். மகாத்மா காந்தி அவர்கள், ஒரு தனி மனிதனாக, தென்னாப்பிரிக்கா மற்றும் நமது நாட்டில் புரட்சி செய்து, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடிந்தது. கர்மவீரர் காமராஜர், ஒரு தனி மனிதராக, தமிழகத்தில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடிந்தது. எனவே, ஒவ்வொரு தனி மனிதரும், லஞ்சத்தைத் தவிர்க்க உறுதி ஏற்போம்.

அதனால் வரும் பிரச்சினைகளை எதிர்த்து உழைப்போம். ஒவ்வொரு தனி மனிதரும், லஞ்சத்தை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் அரசியல் மாற்றம் வரும். அனைவரும் இணைந்து, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், சுத்தமான காற்று, பாதுகாப்பான சமூகம் என நல்ல சமுதாயத்தை உருவாக்க உழைப்போம். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பணிகளுக்கான இலக்கை உயர்த்துவோம். சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். விழாவில், தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அஸோசியேஷன் கோவை மாவட்டத் தலைவர் தங்கவேல், செயலாளர் நந்தகோபால், பொருளாளர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள்,

இதில் தமிழக பாஜக சார்பில், மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் திரு ரமேஷ்குமார், நீலகிரி பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version