வேட்டைக்காரன் புதூரில் இருந்து என் மண் என் மக்கள் நடைபயணம் துவங்கி, ஆனைமலை முக்கோணம் பகுதியில் நிறைவடைந்தது.
அதில், பங்கேற்ற பா.ஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது:
காமராஜர் காலத்தில் தான் பி.ஏ.பி., திட்டம் செயல்படுத்தப்பட்டது.அவரது ஆட்சி காலத்தில் அணைகளை கட்டி எவ்வாறு விவசாயத்திற்கு நீரை கொண்டு வந்தாரோ அதே போல் தி.மு.க., மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் எங்கும் டாஸ்மாக் கொண்டுவந்தார்.
குடிக்க நீர் இருக்கோ இல்லையோ, எல்லா பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன.
விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க., உள்ளது.கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டிய பின்பும் இதுவரை ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்த பேச்சு நடத்தப்படவில்லை. இத்தனைக்கும் தி.மு.க., அரசு கேரளா அரசுடன் இணக்கமாக உள்ளது.
ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்துக்கள் சொன்ன தமிழக முதல்வர், ஒருவார்த்தை அந்த மாநில முதல்வருடன் பேசி ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை செயல்படுத்த சொல்ல முடியாதா; விவசாயிகள் கஷ்டம் அவருக்கு தெரியாது. விளை நிலத்தில் கான்கிரீட் ரோடு போட்டு சென்று போஸ் கொடுத்தவர் தான் முதல்வர்.
தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவிற்கு விட்டு கொடுக்கிறார் தமிழக முதல்வர்.இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது.
ஒரே ஒரு குடும்பத்திற்காக தான் இந்த அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களுக்காக செயல்படவில்லை.பிரதமர் மோடி ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் ஊழல் இல்லாமல் ஆட்சி செய்துள்ளார்.தமிழக வளர்ச்சிக்காக 10 லட்சத்து, 76 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.ஆனால், மத்திய அரசு திட்டங்களுக்கு தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்ட மட்டும் தான் நேரம் இருக்கிறது.
தேர்தலின் போது மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கொடுப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் தற்போது ஒரு கோடியே, 6 லட்சம் பெண்களுக்கு தான் கொடுக்கின்றனர்.
அதிலும், 60 சதவீதம் பெண்களுக்கு கிடைக்கவில்லை.இது வெறும் லோக்சபா தேர்தலுக்கான டிராமாதான். இத்தேர்தலில் தி.மு.க., சாயம் வெளுக்கும் என பேசினார்.