தமிழகத்தை உலுக்கி வரும் போதை பொருள் புழக்கம். தினம் தோறும் கிலோ கணக்கில் கஞ்சா பிடிபடுகிறது. குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆளும் கட்சி நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தலில் பிடிபடுகிறார்கள்.
இந்தநிலையில் இந்தியாவையே உலுக்கிய சம்பவம் தான் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல். இந்த கடத்தல் சம்பந்தமாக கைதாகியிருக்கும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பிலிருந்த சினிமா, அரசியல் பிரபலங்களின் ஆடியோக்களை என்.சி.பி ஆய்வுசெய்ததும், ஆஸ்திரேலிய போலீஸார் ஜாபர் சாதிக்கை விசாரித்து வருவதும் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்துவந்த ஜாபர் சாதிக்கை, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் (என்.சி.பி) கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்குடன் தொடர்பிலிருந்த இயக்குநர் அமீர் உள்ளிட்டோரிடம் என்.சி.பி அதிகாரிகள் விசாரணை நடத்திவந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையும் சோதனை நடத்தியது.
இந்த நிலையில், திகார் சிறையிலிருக்கும் ஜாபர் சாதிக்கிடம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். விரைவில் ஜாபர் சாதிக்கை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் அந்த நாட்டு அதிகாரிகள் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
“ஜாபர் சாதிக், அவரின் கூட்டாளிகள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்யப்பட்டுள்ளது அதில், ஜாபர் சாதிக் வியாபாரம் தொடர்பான ஆடியோ மெசேஜுகளைச் சிலருக்கு அனுப்பி வைத்திருப்பது உறுதியானது. அந்த ஆடியோக்களில், ‘போதைப்பொருள் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல்’ உள்ளிட்ட பல்வேறு ரகசியத் தகவல்கள் இருந்தன.
இதையடுத்து ஆடியோவில் இருப்பது ஜாபர் சாதிக்கின் குரல்தானா என்பதையும் குரல் பரிசோதனை மூலமாக உறுதி செய்திருப்பதோடு, ஜாபர் சாதிக்குடன் பேசியவர்கள் யார், யார் என்ற விவரங்களையும் சேகரித்திருக்கிறோம்.
இதில் கோலிவுட் பிரபலங்களும், தி.மு.க-வைச் சேர்ந்த அரசியல் புள்ளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் அடுத்த கட்டமாக விசாரிக்க முடிவுசெய்துள்ளது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்து விட்டோம். அதில் நான்காவது குற்றவாளியாக ஜாபர் சாதிக் சேர்க்கப்பட்டி ருக்கிறார்.
ஏற்கெனவே இந்த வழக்கில் கைதாகியிருக்கும் முகேஷ், முஜிபூர் ரகுமான், அசோக்குமார், சதானந்தம் ஆகியோர் ஜாபர் சாதிக் குறித்த முக்கியத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த விவரங்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றையும் விரைவில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு.
“ஜாபர் சாதிக்கை நாங்கள் காவலில் எடுத்து விசாரித்தபோது, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த அதிகாரிகளும் ஜாபர் சாதிக்கை விசாரணை செய்துள்ளார்கள். அப்போது அவர்கள், தங்கள் நாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து செய்த குற்றங்கள் குறித்த தகவல்களை ஜாபர் சாதிக்கிடம் துருவித் துருவி விசாரித்துள்ளார்கள்.
அந்தத் தகவல்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக்கை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் அந்த அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். மேலும், இந்த வழக்கை அமலாக்கத்துறையினரும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் . ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. அதிலும் வெளிநாடுகளிலிருந்து ஹவாலா வழியாகப் பணம் இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. இதற்கு சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஹவாலா நெட்வொர்க் உதவியிருக்கிறது. அதனால் அந்த மண்ணடி கும்பலில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்களை அனுப்பியிருக்கும் ஜாபர் சாதிக்கும், அவருடைய கூட்டாளிகளும் அதற்கான பணத்தை ஹவாலா வழியில் பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பான ஆதாரங்கள் சமீபத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் கிடைத்துள்ளது.