அயோத்தி ராமர் கோவில் நிலம்! – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? முழுவிவரம்.

அயோத்தியில் பாபர் மசூதி 1528ம் ஆண்டு கட்டப்படுகிறது. இந்த இடம் இந்துக்களால்  ராமர்  பிறந்ததாக  நம்பப்படும்  பகுதியாகும். மசூதி கட்டப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அந்த பகுதியில் இரு தரப்பிற்கும் நடுவே மோதல் ராமர் பிறந்த அந்த இடத்தில்,  கட்டுவதற்கு இந்துக்கள் எதிர்ப்பு.

1853: அயோத்தியில் முதன் முதலில் வன்முறை வெடித்தது. 75 பேர் பலி.

1859: பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட ஏற்பாடு. உட்பகுதியில் முஸ்லிம்கள் வழிபடவும், வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபடவும் வகை செய்யப்பட்டன. இருபுறம் சுவர் எழுப்பி மோதல் தவிர்க்கப்பட்டது.

1934: நாடு முழுவதும் இந்து -முஸ்லிம் கலவரம். மசூதி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

1949: மசூதியில் ராம விக்ரகம் வைக்கப்பட்டது. இந்துக்களால் சிலைகள் வைக்கப்பட்டன எனக் கூறி முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு அரசு பூட்டுப் போட்டது. அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவிக்கப்பட்டது.

1950: அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது என்று பைசாபாத் கோர்ட்டில் கோபால் சிங் விஷாரத் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக கோர்ட்டுக்கு சென்ற முதல் வழக்கு.

1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் கோர்ட்டில் நிர்மோகி அகாரா வழக்கு.

1961:  உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியமும், எட்டு ஷன்னி முஸ்லிம்களும் இணைந்து, டிச., 18ல், பைசாபாத் கோர்ட்டில் பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி வழக்கு.

1974: கோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து புதிய அதிகாரி நியமனம்.

1984: ராமர் பிறந்த இடத்தை மீட்போம் என்ற கோஷத்துடன் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், பிற அமைப்புகளும் வலுப்பெற ஆரம்பித்தன.

1986: மசூதியின் உள்ளே சென்று இந்துக்கள் வழிபடலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

1986: அயோத்தி தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் உ.பி., அரசு மனு செய்தது. “பாபர் மசூதி நடவடிக்கைக் கமிட்டி’ உருவானது.

1987: மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலிருந்த வழக்குகளை உ.பி., அரசு வாபஸ் பெற்று அவற்றை விரைந்து முடிக்க ஐகோர்ட்டில் தாக்கல்.

1989:  சர்ச்சைக்கு உட்பட்ட இடம் அனைத்தும், கோவில் என அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் வழக்கு. இது தொடர்பாக பைசாபாத் கோர்ட்டில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும் மூன்று நீதிபதிகள் கொண்டஅலகாபாத் ஐகோர்ட் பெஞ்சுக்கு மாற்றம்: ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற கோஷத்துடன் புறப்பட்ட வி.எச்.பி., அமைப்பினர், சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் கோவிலுக்கான அடிக்கல் நாட்டினர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் பலி.

1990: வி.எச்.பி., தொண்டர்களால் மசூதி சிறிதளவு சேதப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் சந்திரசேகர், பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

1991: மசூதி மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியின் மையப்பகுதியில் 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு. அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம், ஆனால் அந்த இடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது என்று கோர்ட் உத்தரவு. அயோத்தியில் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதிகளை அரசு கையகப்படுத்தியது. உ.பி.,யில் நடந்த தேர்தலில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.

1992: டிசம்பர் 6ல் மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாயிரம் பேர் பலி.

1994: விசாரணை நீதிமன்ற உத்தரவு வரும்வரை அயோத்தியின் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதியில், எந்த கட்டுமானப் பணிகளோ அல்லது வழிபாடோ இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

1996: மசூதி இடிப்பு தொடர்பான சாட்சிகள் மீதான விசாரணை.

1998: வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசு பதவியேற்பு.

2001: அயோத்தி இடிக்கப்பட்ட நினைவு தினத்தில், அவ்விடத்தில் கோவில் எழுப்ப வி.எச்.பி., உறுதி. மார்ச் 12ம் தேதி கோவில் கட்டும் பணி துவங்கும் என்று அறிவித்தது.

2002 ஜனவரி: அயோத்தி தொடர்பான பிரச்னைக்கு என, சத்ருகன் சிங் தலைமையில் ஒரு அலுவலகத்தை பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அது இந்து -முஸ்லிம் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதால், உருவானது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

2002 பிப்ரவரி: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. கோவில் கட்டுமானப் பணிகளை மார்ச் 15ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் என, வி.எச்.பி., கெடு விதித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 58 பேர் பலியாயினர்.

2002 மார்ச்: குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பலி.

2002 ஏப்ரல்: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, ஐகோர்ட்டில் மூன்று நீதிபதிகள் தலைமையில் குழு விசாரணை துவங்கியது.

2003 ஜனவரி: கோர்ட் உத்தரவுப்படி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு.

2003 ஆகஸ்ட்: தொல்லியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாக தெரிவித்தனர்.

2003 செப்டம்பர்: பாபர் மசூதி இடிப்பில் ஏழு இந்து தலைவர்களுக்கு தொடர்ப்பு இருப்பதாகவும், ஆனால் அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் கோர்ட் அறிவித்தது.

2004 அக்டோபர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பா.ஜ., உறுதியாக இருப்பதாக அத்வானி தெரிவித்தார்.

2004 நவம்பர் : மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு தொடர்பு இல்லை என அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய கோர்ட் முடிவு.

2005 ஜூலை: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில் வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப்பை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. 2011ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2019 நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்தார். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் ஆணையிட்டார். 

மசூதி இடிப்பு வழக்கின் திர்ப்பு இம்மாதம் 30 ம் தேதி வழங்கப்படஉள்ளது.

கட்டுரை :- எழுத்தாளர் குமரி சுந்தர்.

Exit mobile version