மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மதுபான கடையில் காலாவதியான டின் பீர் வாங்கி அருந்திய இரண்டு பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (31) மற்றும் சார்லஸ் (27). நண்பர்களான இருவரும் நேற்று பிற்பகல் மது அருந்துவதற்காக அரசு மதுபான கடையான டாஸ்மாக் சென்று உள்ளனர். தென்னலக்குடியில்டாஸ்மாக் கடையில் டின் பீர்களை வாங்கி அருந்தி உள்ளனர். இந்த நிலையில், அவர்கள் டின் பீரை அருந்திய சில மணி நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த அவரது நண்பர் அளக்குடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மற்ற நண்பர்கள் உதவியுடன் மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் அருந்திய பீர் காலாவதியாகி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.தற்போது அங்கு மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து, சீர்காழி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, காவல் ஆய்வாளர் சிவக்குமார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

போலீசார் அளித்த முதற்கட்டத் தகவலின் படி, “அரசு மதுபான கடையில் வாங்கிய டின் பீர் கடந்த ஜனவரி மாதத்துடன் காலாவதி ஆனது தெரியவந்தது. காலாவதி ஆன மதுபானத்தைக் குடித்ததால்தான் மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தென்னலக்குடி டாஸ்மாக் கடையில் உறவினர்கள் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.