இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அரசு கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை ஈரானுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து எந்த நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லாமலே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதுவெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.மேலும், ஈரானின் ராணுவ முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தியுள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கியுள்ளது, இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இரண்டு அமெரிக்க அதிகாரிகள், “இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது” என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் “இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நாடு தழுவிய அவசர நிலையை அறிவித்தார். இஸ்ரேல் மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மிக விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளது, ஈரான் நமக்கு பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக காட்ஸ் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் இந்த அவசர நிலையை அமல்படுத்த அவர் ஒரு சிறப்பு உத்தரவில் கையெழுத்திட்டார்.அவர் அளித்த பேட்டியில், “இஸ்ரேல் அரசு ஈரான் மீது முதல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான பதிலடி தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.
இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டினார்.அணுவை வெறுமனே அணு ஆயுதம் உருவாக்க பயன்படுத்த முடியாது. யுரேனியத்தை அப்படியே எடுத்து அணு குண்டு போட முடியாது. அதை பயன்படுத்தும் முன் செறிவூட்ட வேண்டும். ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் தாக்குதல் நடந்து உள்ளது. இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் மீது இஸ்ரேல் டிரம்ப் சொற்படியே தாக்குதல் நடத்தி உள்ளது. எனவே இஸ்லாமிய நாடுகள் டிரம்ப்க்கு எதிராக திரும்பியுள்ளது.