பயிரை விட “களைகள்” அதிகம் – நியூஸ் 18 பரிதாபங்கள் ..தமிழக தொலைக்காட்சி வானில், குறுகிய காலத்திலேயே தனது சேனலுக்கென்று ஒரு தரமான இடத்தை பிடித்தது நியூஸ் 18. தொழில்நுட்பம், ஒலி, ஒளி, மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதம் ஆகியவற்றின் மூலம் செய்தி சேனல்களின் வரிசையில் முன்னணி இடத்தை நியூஸ்18 விரைவிலேயே கைப்பற்றியது.
ஆனால் அதே சமயம், உடன் பிறந்தே கொல்லும் நோய் போல, உள்ளிருந்து மரத்தை அழித்துவிடும் செல்கள் போல, நியூஸ் 18 சேனலில் பணிபுரியும் ஒரு சில செய்தியாளர்கள், ஒரு தரமான சேனலின் மதிப்பை மெல்ல மெல்ல இழக்கச் செய்துவரும் சில செயல்களை பார்க்கும்போது உண்மையிலேயே பரிதாபமாக உள்ளது.
பாஜக கட்சியையும் தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக சமூக வலைத்தளங்களில் பல போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஊட்டி மலை ரயிலில் காண்ட்ராக்ட் மூலம் தனியார் ரயில்கள் விடப்படுவது வழக்கம் தான்.
தனியார் காண்ட்ராக்ட் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை, ரயில் கட்டண விலையாக வேண்டுமென்றே திரித்து, ஒரு சில செய்திகள் சமூக வலைதளங்களில் விஷமிகள் மூலம் பரப்பப்பட்டன. ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு இந்த வதந்தி எடுத்துச்செல்லப்பட்ட உடன், உண்மை நிலையை ரயில்வே துறை விளக்கியது.இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு நியூஸ்18 தொலைக்காட்சியின் நிருபர், பாஜக தலைவர் ஹெச் ராஜா அவர்களிடம் இந்த பொய் செய்தியை அடிப்படையாக வைத்து கேள்வி கேட்கிறார். “3000 ரூபாய் ரயில் கட்டணம் செலுத்த முடியாதவர்கள், ஏன் ஊட்டி செல்ல வேண்டும்? என்று நிர்மலா சீதாராமன் கேள்வி கேட்டிருக்கிறாரே” என்பதுதான் அந்தக் கேள்வி. இது மேலே குறிப்பிடப்பட்ட பொய் செய்தியின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வி.
ஒரு தொலைக்காட்சி சேனலில் தரம் எவ்வளவு தாழ்ந்து வருகிறது என்பதற்கு இந்த நிருபரின் கேள்வி ஒரு உதாரணமாகவே திகழ்கிறது.ஆளும் கட்சியை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய முக்கியமான கடமை பத்திரிகை துறைக்கும், ஊடகத் துறைக்கு உள்ளது. இந்திய தேசத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்து, பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் மிதித்து, அதிகாரத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அந்த நிலையில் கூட பிரதமரை எதிர்த்து சோ ராமசாமி, அருண்ஷோரி, எஸ் குருமூர்த்தி ஆகியோர் இந்திரா காந்தியை எதிர்த்து பல கட்டுரைகளை எழுதினர். அறிவு என்ற பேனா முனையில், சத்தியம் என்ற மையை ஊற்றி எழுதிய அந்த கட்டுரைகளில், ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பைப் போல அரசை சுட்டன. ஆனால் இந்திரா காந்தியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த இடத்திலும் பொய் என்னும் சாக்கடையில் இந்த பத்திரிகையாளர்கள் இறங்கவில்லை. திக, திமுக ஆகியவற்றின் ஆதிகால சரித்திரத்தை எடுத்துச் சொல்லி இந்த தீயசக்திகளின் உண்மை முகத்தை, மக்களிடம் எடுத்துச் சென்றவர் திராவிடமாயை சுப்பு. இந்தக் கட்டுரைகள் துக்ளக் நாளிதழில் வெளிவந்தபோது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின. எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொய்களை என்றுமே துணைக்கு அழைத்ததில்லை திராவிட மாயை சுப்பு. அதனால்தான் இன்னும் எழுத்தாளர் உலகில் ஜாம்பவானாக சுப்பு மதிக்கப்படுகிறார்.
மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொய்களை அஸ்திவாரமாக கொண்டு இயங்கும் பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி சேனல்களும், தனது மதிப்பை இழக்கிறார்கள்.சத்யமேவ ஜெயதே என்பது வேத வாக்கியம். அதுவே நமது இந்திய மண்ணின் கௌரவம். சத்தியத்தை மீறி கிடைக்கும் வெற்றிகள் என்றைக்குமே நிலைப்பதில்லை.பொய்யான செய்திகளை நம்பி அதையே கேள்வியாக கேட்ட நிருபரை நியூஸ்18 தொலைக்காட்சி நிறுவனம் பணி நீக்கம் செய்து விட்டதாக செய்திகள் கசிந்து வருகின்றன. இது உண்மை என்றால், அந்த நிருபரை சரியான வழியில் நடத்த தவறிய தலைமை நிருபர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?உண்மை நிலை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள சில தொலைக்காட்சி சேனல்களில் பணி புரியும் ஒரு சிலர், சம்பளத்தை சேனலில் பெற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் ஒரு சில கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதற்கும், ஒரு சில கட்சிகளுக்கு எதிர்ப்பு நிலையை எடுப்பதற்காகவும் தனிப்பட்ட முறையில் கையூட்டு பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் வெளிவந்த திரைப்படம் அன்பே வா. அதில் முதலாளி சிம்லாவில் கட்டிவைத்த கெஸ்ட் ஹவுஸ் அறைகளை, சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு, அதன் காப்பாளர் சம்பாதிக்கிறார். அதேபோல யாரோ கோடிக்கணக்கில் முதலீடு செய்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சிலர், தங்களது சொந்த லாபத்திற்காக தொலைக்காட்சி நிறுவனத்தை ஒரு கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.நெற்பயிர் விளையும் போது களைகளும் இருக்கும். ஒழுங்காக பராமரிக்க தவறினால் பயிரை விட களைகள் மிகுந்து விடும். தமிழக தொலைக்காட்சி சேனல்கள், இது போன்றதொரு இக்கட்டான சூழலில்தான் தற்போது உள்ளன. தவறு செய்த ஓரிரு நிருபர்களை பணிநீக்கம் செய்வதன்மூலம் இந்த நோயிலிருந்து விடுபட முடியாது. முழுவதுமாக களை எடுக்கப்பட வேண்டும்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று யார் தவறு செய்தாலும் தைரியமாக கேள்வி கேட்க வேண்டும். எந்த நேரத்திலும் உண்மை என்பதை விட்டு விலகக் கூடாது.நியூஸ்18 நிறுவனம் மீது நம்பிக்கை உள்ளது. – பத்மநாபன் நாகராஜன்