கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பா.ஜ.க மீண்டும் கைப்பற்றும் – வினோஜ் ப செல்வம் அதிரடி!

பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம், கன்னியாகுமரி மாவட்டம், கோட்டகம் வியாசர் இளைஞர் நற்பணி மன்ற 23-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 75 பேருக்கு வேட்டி சேலைகளையும், 8 பேருக்கு தையல் மெஷின்களையும், மாணவ – மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் கல்வி உதவித்தொகையும் வழங்கினார்.

முன்னதாக வினோஜ் ப செல்வம், செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

கோட்டகம் யாசர் இளைஞர் நற்பணி மன்றம் ஆனது கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு நற்பணிகளை துடிப்போடு செய்து வருகிறது. ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை ஜாதி மத வேறுபாடு இன்றி செய்து வருகிறார்கள. இன்று 23-ஆவது ஆண்டுவிழாவில் பாஜக மாநில இளைஞரணி தலைவராக நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக எழுச்சியோடு இந்த விழா நடந்து வருகிறது. காலகட்டம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடித்து விழா நடத்தப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் இந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்களுக்கு வியாசர் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களிடம் தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றன. நீட் தேர்வாக இருந்தாலும் சரி, புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி அவர்கள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். எனவே இளைஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். திமுக போன்ற சக்திகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நீட் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆவதற்கான எளிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கோடி ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சீட்டுகளை இப்போது அதிகமா மதிப்பெண் வாங்கியவர்கள் இலவசமாக பெற்று படிக்கிறார்கள்.

எனவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் நிச்சயமாக மருத்துவர் ஆகலாம் என்ற நம்பிக்கையை நமது மாணவ சமுதாயத்திற்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல புதிய கல்விக் கொள்கையானது நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும்.இதை பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்து உள்ளார். மூன்றாவது மொழியை மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே இந்தி திணிப்பு என்ற திமுகவின் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது ஒரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொல்லப்பட்டுள்ளது தவிர இந்தியை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. எனவே இந்தி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் திமுகவின் இது போன்ற திசைதிருப்பும் நாடகத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்கவனமாக இருக்க வேண்டும். திமுகவிடம் ஏமாந்து விடக்கூடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ” நான் ஒரு விவசாயி. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதை தெரிந்துதான் நாங்கள் வரவேற்று உள்ளோம்” என்று மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். நிச்சயமாக இந்த சட்டங்கள் மூலமாக இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள. ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த புதிய சட்டங்களை பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ரோடு ரோடாக சென்று தங்களின் ஆதரவை தெரிவித்து ஆரவாரம் செய்து வருகிறார்கள். அது போன்று தமிழகத்திலும் ஆதரவு அளித்து வருகின்றனர்.குறிப்பாக ஒரு விவசாயியாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த சட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ள தன் மூலம் தமிழக விவசாயிகள் மிகவும் பயனுள்ள சட்டம் என்பது தெளிவாகியுள்ளது.

ஆட்சிக்கு வந்தால் இத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக அப்பட்டமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது. 2019 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இதே போல, நாங்கள் வெற்றி பெற்றால் நகை கடன்களை தள்ளுபடி செய்தோம் என்று நடைமுறைக்கு சாத்தியமா ரவியை கொடுத்து மக்களை ஏமாற்றினார். இப்போதும் அதே பாணியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று சொல்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு களின் அடிப்படையில் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு முதன் முதலாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது அதை நடத்தியவர்களை காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியான திமுகவும் தான். அப்போது அவர்கள் நீட் தேர்வை நடத்தினார்கள். ஆனால் அதன்பிறகு கோர்ட்டு உத்தரவின்படி தான் நீட் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் நீட்தேர்வை இனிமேல் தடை செய்ய முடியாது என்பதை தெரிந்து இருந்தும், மாணவர்களை குழப்பும் அதற்காகவும், அதன்மூலம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்றும் திமுகவினர் பொய்யை பரப்பி வருகின்றனர்.பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் அல்லது கூட்டணி அமைத்து சந்திக்குமா என்பதெல்லாம் பாஜகவின் தலைமை முடிவு எடுக்கும். ஆனால் பாஜக தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது திமுக பாஜகவை எதிர்த்து அரசியல் நடத்தும் அளவிற்கு எங்கள் கட்சி வளர்ந்துள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலை நாங்கள் வெற்றிகரமாக சந்திப்போம்.

பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் எம்பி ஆக இருந்த காலகட்டத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக மார்த்தாண்டம் மேம்பாலம், பார்வதிபுரம் மேம்பாலம், சுசீந்திரம் பாலம் போன்றவைகள் கட்டப்பட்டதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளார். இதுபோன்று பல நல்ல திட்டங்களை குமரி மாவட்டத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவந்துள்ளார்.

எனவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்தரே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேபோல திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. நீட் தேர்வு எழுத மாணவர்கள் செல்ல மாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் 97% மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளார்கள். இதேபோல புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்து உள்ளன.

எனவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நிச்சயமாக பாஜகவை சேர்ந்தவர் எம்பியாக வருவார்.

இவ்வாறு பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் கூறினார்.

Exit mobile version