உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்ததுபோல கர்நாடக மாநிலம் பெங்களூரு கலவரத்தின்போது அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 11-ம் தேதி இரவு காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் முகநூலில் மதவெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கூறி கலவரம்செய்தனர். இதில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு, தனியாருக்கு சொந்தமான 100-க்கும்மேற்பட்ட வாகனங்களும், வீட்டுஉபயோக பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், இதுவரை 370 பேரை கைது செய்துள்ளனர்.
முதல்வர் எடியூரப்பா நேற்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமை செயலர் விஜய பாஸ்கர், தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவடகி, காவல் துறை டிஜிபி பிரவீன் சூட், பெங்களூரு காவல் ஆணையர் கமல் பந்த் ஆகியோரிடம் பெங்களூரு கலவர வழக்கு குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் முதல்வர் எடியூரப்பா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பெங்களூருவில் வன்முறை நடந்த காடுகொண்டன ஹள்ளி,தேவர்ஜீவன ஹள்ளி பகுதிகளில்அரசு, தனியார் சொத்துகள் மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான இழப்பீடு, பராமரிப்பு செலவை அதை சேதப்படுத்திய வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். எனவே தனி ஆணையரை நியமிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தை நாட அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து சமூகவலைதளங்களின் பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக வலைதளங்களின் தற்போதைய சட்ட நடைமுறைகளை ஆராய்ந்து, புதிய கட்டுப்பாடுகளை உருவாக்குவது குறித்து விரைவில் அதன் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்’’ என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதே பாணியை கர்நாடக அரசும் பின்பற்ற தயாராகி வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















