தஞ்சாவூர்-தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் வழங்குவதாகக் கூறி, மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் இறந்ததால், நுாற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்க குவிந்தனர்.
தஞ்சை மாவட்டம்ரஹ்மான் நகரில் வசித்து வந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் என்ற பெயரில் பஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தான் நடத்தி வரும் பஸ் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கும் லாபமும் அறிவித்தார். இதனை தொடர்ந்து இசுலாமியர் என்பதால் இவரின் பஸ் நிறுவனத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் 1 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.
மேலும் அவர்கள் மூதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை லாபத் தொகையை வழங்குவதாக கூறியுள்ளார். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம், 700 கோடி ரூபாய் வரை கமாலுதீன் திரட்டி உள்ளார்.
முதல் இரண்டு மாதங்கள் லாபத் தொகையை பங்குதாரர்களுக்கு வழங்கிய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக லாபத் தொகையை வழங்காமல், கொரோனா ஊரடங்கை காரணம் கூறி சமாளித்து வந்துள்ளார்.
மேலும் வசூல் செய்த பணத்தில் பஸ்களை வாங்காமல், வங்கியில் கடன் வாங்கி பஸ்களை வாங்கியுள்ளார். பங்குதாரர்களிடம் வாங்கிய பணத்தில் பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஓட்டல்கள், பிரிண்டிங் பிரஸ் என, 400 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்துக்களை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த செப்., 19ம் தேதி கமாலுதீன் இறந்தார். இதையடுத்து பங்குதாரர்கள், கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்கள் அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் ஆகியோரிடம் பணத்தை கேட்ட போது, அவர்கள் இதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இருந்தும் பலர் பணம் கொடுத்துள்ளனர். கமலுாதீன் இறந்த நிலையில் அவரது வாரிசுகள் எங்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். ‘ராஹத் பஸ் நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தர கலெக்டர் நடவடிக்கை வேண்டும்’ என்றனர்.