தமிழ்நாட்டில் புனித தலங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நிதியளிப்பு.

புனித யாத்திரை,புனித தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,பாரத நாட்டில் உள்ள பல்வேறு புனித தலங்களில் மத்திய சுற்றுலா அமைச்சகம் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மேம்பாட்டுப் பணிக்காக 13.99 கோடி ரூபாயும், வேளாங்கண்ணி மேம்பாட்டுப் பணிக்காக 4.86 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டு, அத்தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 8 நவகிரக கோயில்களில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயில், ஆலங்குடியில் உள்ள குருபகவான் கோயில், திருநாகேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ நாகநாதர் கோயில், திருவிடைமருதூரில் உள்ள ஸ்ரீ சூரியனார் கோயில், கஞ்சனூரில் உள்ள ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், திருவெண்காட்டில் உள்ள ஸ்வேதாரனீஸ்வர் கோயில் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமான ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 2016-17-ம் ஆண்டில், சென்னை -மாமல்லபுரம் கடலோரப்பகுதி மேம்பாட்டிற்காக 71.03 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, அத்தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலை 30.02 கோடி ரூபாய் செலவில் அழகுறச் செய்ய 2024 பிப்ரவரி 29 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

Exit mobile version