சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு ரிப்பன் கட்டிடம் என்று எதற்காக பெயர் வைத்திருக்க்கிறோம் தெரியுமா?

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தி. கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்பதில் மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார். மாநிலத்திற்கு சுயாட்சி முக்கியம் என்று மாநில அரசுகள் வலியுறுத்துவதைப் போலவே, கிராம ஊராட்சிகளுக்கும் சுயாட்சி வழங்க வேண்டும் என்பது தான் மகாத்மா காந்தியின் லட்சியம், கனவாக இருந்தது.

கிராம சுயராஜ்யம்‘‘கிராம சுயராஜ்யம் என்றால் ஒவ்வொரு கிராமமும் முழுமையான குடியரசாக இருக்க வேண்டும். அதன் அடிப்படைத் தேவைகளுக்கு அண்டை ஊராட்சிகளை சார்ந்திருக்காமல் தற்சார்பு பெற்று இருக்க வேண்டும். அதே நேரத்தில் எந்தெந்த தேவைகளுக்கு எல்லாம் பிறரை சார்ந்திருக்க வேண்டுமோ அதற்கெல்லாம் மற்ற கிராமங்களை சார்ந்திருக்க வேண்டும். அது தான் கிராம சுயராஜ்யம்’’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார்.

கிராமங்களுக்கு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அவை முழுமையான வளர்ச்சி பெற்று விடும்; அவற்றின் மூலம் இந்தியாவும் வளர்ச்சி அடையும் என்பது மகாத்மாவின் நம்பிக்கை. ‘‘எனது கனவு நிறைவேறுமானால் இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களிலும் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. அனைவரும் தேசத்தின் பயனுக்கான பணியில் ஈடுபட்டிருப்பர்.

அனைவருக்கும் ஊட்டமான உணவு, பாதுகாப்பான இருப்பிடம், சுகாதாரமான வாழ்க்கை, தமது தேவைகளைத் தாமே தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஆகியவை உறுதி செய்யப்பட்டிருக்கும்’’ என்று 1922&ஆம் ஆண்டு அரிஜன் இதழில் காந்தி எழுதினார்.மகாத்மா காந்தியின் இந்த கனவு நனவாகியிருந்தால் உலகின் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா உயர்ந்திருக்கும். ஆனால், அவ்வாறு முன்னேறாததற்கு காரணம் கிராமங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்காதது தான்.ரிப்பன் பிரபு – உள்ளாட்சிகளின் தந்தைசமூகநீதியை வழங்குவதில் தமிழ்நாடு எவ்வாறு இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறதோ, அதே போல் உள்ளாட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்தது. சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு ரிப்பன் கட்டிடம் என்று எதற்காக பெயர் வைத்திருக்க்கிறோம் தெரியுமா?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபு தான் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்துவதில் இருந்த தடைகளை நீக்கி சட்டம் கொண்டு வந்தார். அதனால் அவர் உள்ளாட்சிகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவரது நினைவாகத் தான் சென்னை மாகாணத்தின் மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சிக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Exit mobile version