கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை எதிர்த்து மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுடன் ஒன்றிணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்காக மூன்று முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், வெளியே வரும்போது பாதுகாப்பான தூர விதிமுறைகள் மற்றும் முகமூடிகளை கட்டாயமாக அணிவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள், திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கோவிட் – 19 பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி பரவும் சங்கிலியை தகர்ப்பதே என்பதால், மக்களின் நலனுக்காக இந்தக் கட்டுப்பாடுகள் செய்யப்படுகின்றன. காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க முகவர்கள், மக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வெளியே வருவதைத் தடுப்பதிலும், சந்தை இடங்களின் கூட்டத்தைத் தடுப்பதிலும் மும்முரமாக உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் பலரின் கவனத்திற்கு வராமல் போகும் வாய்ப்பிருப்பதால், சிலரால் குழந்தைத் திருமணங்களை நடத்த தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் – PCMA குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது, பாதுகாப்பது மற்றும் வழக்குத் தொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்வது சட்டவிரோதமானது. குழந்தைகளுக்கிடையில் எந்தவொரு திருமணமும் சட்டவிரோதமானது என்று கருதப்படுகிறது. இந்தத் திருமண ஒப்பந்தத்தை மேற்கொண்ட இருவரும் குழந்தைத் திருமணத்தை இரண்டாண்டுகளுக்குள் ரத்து செய்யலாம். அத்தகைய மனு சிறுமியான பெண் அல்லது பையனால் மட்டுமே செய்யப்படும். குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்திய குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படும். சட்டத்தின் 11 வது பிரிவின்படி, குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் மற்றும் அனுமதிக்கும் நபர்களுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு குழந்தைத் திருமணங்களை நடத்துபவர்களுக்கும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தைத் திருமணத்தை தடுக்க விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். திருச்சிராப்பள்ளியில், ஊரடங்கு காலத்தில் 74 குழந்தைத் திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடுமையான எச்சரிக்கையை வழங்க அதிகாரிகளைத் தூண்டியுள்ளது. 74 குழந்தைத் திருமண வழக்குகளில், 15 திருமணங்கள் நடத்தப்பட்ட பின்னரே பதிவாகியுள்ளன, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைத் திருமணங்களைப் பற்றி அறிந்தால் மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலரிடம் புகார் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டணமில்லா உதவி எண் 1098 இல் புகார்களையும் பதிவு செய்யலாம். திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தமிமுனிசா, மக்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள் மற்றும் பெண்கள் மீது அரங்கேறும் வீட்டு வன்முறைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக ஆர்வலர் திருமதி. சுபத்ரா கூறுகையில், சிறுமிகள் இளம் வயதிலேயே திருமணமாகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது கவலைக்குரியது. அவர்கள் உளவியல் ரீதியாக திருமணத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததால், அது திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பெண்கள் கல்வியை நிறுத்த வேண்டியிருக்கும், இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
உலகெங்கிலும் 2030க்குள் குழந்தைத் திருமணத்தின் மூலம் நடக்கும் மனித உரிமை மீறலை முடிவுக்குக் கொண்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில் நடைபெறும் வீட்டு வன்முறையைத் தடுக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். சமூகத்தில் சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருக்க குழந்தைகள் திருமணத் தடுப்பு அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளின் உதவியை நாடலாம்.