தமிழகத்தில் கஞ்சா மட்டுமில்லாமல் விதவிதமான போதை கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.போதை பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் முன்னேறியுளது. வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் முன்னாள் திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பவன் தான். இது தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் கஞ்சா கடத்தி வந்த பள்ளி மாணவர்களை இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பீளமேடு பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வருவதாக எலவனாசூர்கோட்டை காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எம்ஜிஆர் சிலை அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மாணவர்கள் , காண்காணிப்பில் ஈடுபட்ட காவலர்களை கண்டதும் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து அதனை சிறிய சிறிய பொட்டலங்களாக மடித்து வைத்து அதில் இனிப்பு பண்டங்களை சேர்த்து பள்ளி மாணவர்களிடம் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா போட்டலங்களை கைப்பற்றியதோடு அதனை மொத்தமாக விற்பனை செய்த பீளமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்தச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. போதை கலாச்சாரம் அதிகரிப்பதால் கொலை குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் நடக்கும் போதை கலாச்சாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது, தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டுள்ளது. திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக்கொண்டிருக்கும் வேளையில்
முதல்வர் ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார். இனிமேலாவது அவர் விழித்தெழுந்து நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்சினைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார் .