கப்பலில் போராடிய 14 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை !

இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) 2024 ஜூலை 26 காலை 09.30 மணியளவில் மகாராஷ்டிராவின் அலிபாக் கடற்கரை பகுதியில் தரை தட்டி நின்ற ஜே.எஸ்.டபிள்யூ ராய்காட் என்னும் கப்பலில் இருந்து  14 இந்திய ஊழியர்களை மீட்டது.

மும்பையில் உள்ள ஐ.சி.ஜி கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு ஜூலை 25, 2024 அன்று 13.27 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது.

14 இந்திய மாலுமிகளுடன் 122 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அலிபாக்கில் இருந்து சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் உள்ள பாறைகளில் தரைதட்டியது. என்ஜின் அறையில் கடல் நீர் புகுந்து கட்டுப்பாட்டை இழந்ததாக அது தெரிவித்தது.

மகாராஷ்டிரா கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழல் நிலவியதாலும் இப்பகுதியில் பவளப்பாறைகள் இருப்பதன் பின்னணியிலும், வான்வழி வெளியேற்றம் மட்டுமே சாத்தியமான மீட்பு என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இந்திய கடலோர காவல் படை 2024 ஜூலை 26 அதிகாலையில் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், கடலோர காவல்படை ஹெலிகாப்டர் 14 பணியாளர்களையும் வெற்றிகரமாக மீட்டு வெளியேற்றியது. கப்பல் ஊழியர்கள் அலிபாக் கடற்கரையில் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.  யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

ஐ.சி.ஜி நிலையம் முருட் ஜஞ்சிரா தற்போது உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மாலுமிகளுக்கு மேல் சிகிச்சை மருத்துவ உதவி மற்றும் ஆதரவை வழங்கி வருகிறது. கப்பல் மற்றும் சுற்றியுள்ள சூழலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version