திராவிட சித்தாந்தத்தை மாணவர்களிடம் திணிக்கும் ஆட்சியர் : எதிர்ப்பு தெரிவித்த ABVP !

பள்ளி மாணவர்களிடம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி திராவிட கொள்கைகளை திணித்து வருவதாக ஏபிவிபி குற்றசாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.சாந்தி, அவர்கள் வரும் 20/08/2024 மற்றும் 21/08/2024 ஆகிய தேதிகளில் திரு.C N அண்ணாதுரை மற்றும் திரு. ஈ. வே.ராமசாமி ஆகியோரது பிறந்த நாளை ஒட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுவது, தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளில் அரசியல் கட்சியின் கொள்கைகளை திணிக்கும் செயலாகும்.

மேற்படி பேச்சு போட்டிக்காக அண்ணாவின் தமிழ் வளம், மாணவருக்கு அண்ணா, எழுத்தாளராக அண்ணா, அண்ணாவும் பெரியாரும், தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள், சுயமரியாதை இயக்கம்,

தெற்காசியாவின் சாக்ரடீஸ், வெந்தாடி வேந்தர், சமுதாய விஞ்ஞானி பெரியார் உள்ளிட்ட பொருண்மைகளில் தலைப்புகள் வழங்கி, பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் திமுக கொள்கைகளை திணிக்கும் நோக்கமாக இந்நிகழ்வுகள் அமைந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக தலைவர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் நடந்து அதன் மூலம் ஆதாயம் அடைவது சமீப காலங்களில் அதிகாரிகளுக்கு பழக்கமாகியுள்ளது.

இது போன்ற கட்சி கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் திணிக்கும் செயலில் தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியர் ஈடுபட்டு வருகிறார், தான் ஒரு இந்திய ஆட்சிப் பணியாளர் என்பதை மறந்து திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்படுவதை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ABVP கடுமையாக கண்டிக்கிறது.

மேற்படி இவ்விதமான போட்டிகள் மூலம் மாணவர்கள் மத்தியில் திராவிட கொள்கைகளை திணிக்கும் முயற்சியை திருமதி. கி. சாந்தி, அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்று ABVP வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் ABVP போராட்டங்களை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
SOURCE :- மீடியான்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version