போதை மருந்து கடத்தல் வழக்கில், பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுக்பால் சிங் கைராவை போலீசார் கைது செய்தனர். இது அம்மாநிலத்தில் ‛ இண்டியா’ கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
சுக்பால் சிங் கைரா மீது கடந்த 2015 ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜலாலாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சர்வதேச கடத்தல்காரர்களுக்கு ஆதரவு அளித்து அடைக்கலம் அளித்ததுடன், அவர்களிடம் இருந்து பணபலன்களை பெற்றார். இதனை வைத்து சொத்துகளை சேர்த்ததாக குற்றம்சாட்டியிருந்தனர்.
2014- 2020 காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக அவரும், அவரது குடும்பத்தினரும் ரூ.6.5 கோடி செலவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், போலீஸ் சிறப்பு படையினர் சுக்பால் சிங் கைரா வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை சுக்பால் சிங், தனது சமூக வலைதள பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். சோதனை முடிவில் சுக்பால் சிங் கைராவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.