கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. தற்சமயம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாது. மற்றவர்கள் போட்டுக் கொள்ளலாம். அதிலும் பாலூட்டும் தாய்மார்கள்கூட இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மையோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று தமிழ் நாடு அரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனரும் கோவிட்-19 மாநில பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம், ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியன இணைந்து இன்று (9.6.2021) நடத்திய ”கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை: முன் தடுப்பு, தடுப்பூசி, சிகிச்சை மற்றும் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அறிவுரைகள் “ என்ற காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோது டாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மிதமான பாதிப்பு நிலை வரை இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். தொற்று ஏற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க வேண்டும். அளவு 94க்குக் குறைந்தால் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். ஆக்சிஜன் அளவைக் கவனிக்காமல் விட்டுவிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குப் போவது நிலைமையை மோசமாக்கி விடும். இன்னும் சில மாதங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். என்று டாக்டர் குழந்தைசாமி மேலும் கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட அலுவலர் டாக்டர் த.பழனி அறிமுகவுரை ஆற்றினார். அங்கன்வாடிப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு தம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் திரு. ஜெ.காமராஜ் தலைமையுரை ஆற்றினார். சமூக ஊடகங்களில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் தவறான கருத்துகளையும் வதந்திகளையும் நம்பி விடுகின்றனர். இளைஞர்கள் அறிவியலை நம்ப வேண்டும். தடுப்பூசி மீது அவநம்பிக்கை கொள்ளாமல் தாமாகவே முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று காமராஜ் மேலும் கேட்டுக் கொண்டார்.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி அலுவலரும் தலைமை அதிகாரியுமான டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார் கருத்துரை ஆற்றினார். கொரோனா தொற்று ஏற்பட்டால் முதல் 14 நாட்கள் கவனமுடன் இருக்கவேண்டும். சிகிச்சை, ஓய்வு, தூக்கம் ஆகியன இந்த நாட்களில் முக்கியமானவை. இதற்குப் பிறகு 7 நாட்கள் உடல் நிலையில் வேறு பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த 21 நாட்களுக்குப் பிறகுதான் தொற்றாளர் பாதுகாப்பான நிலைக்கு வந்துள்ளார் எனச் சொல்ல முடியும். கொரோனா தொற்றுக்குப் பிறகான காலகட்டத்தில் (Post COVID period) சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று டாக்டர் இராஜேந்திரகுமார் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் திரு. தி.சிவக்குமார் கடந்த 10 நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் சுமார் 5691 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 107 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார். கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.