நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி திமுக அதிக இடங்களை பிடித்தது. ஒன்றிய கவுன்சிலர்கள் இணைந்து, 79 ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இணைந்து, 3,002 ஊராட்சி துணைத் தலைவரை தேர்வு செய்யஉள்ளனர்.
ஊராட்சிகளை பொறுத்தவரை துணைத் தலைவர் பொறுப்பு மிகவும் முக்கியமானது. வங்கியில் பணம் எடுக்கும்போது, தலைவருடன், துணைத் தலைவர் கையெழுத்து இடம் பெற்றால் மட்டுமே ஏற்கப்படும்.
இதேபோல, ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவருக்கும் பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. மத்திய அரசில் இருந்து வரும் பணம் கையாளுவது இவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாவட்ட நிர்வாகமோ மாநில நிர்வாகமோ தலையிடக்கூடாது.
இதன் காரணமாக இந்த பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, திமுகவினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.பணம், பதவி, சொத்து உள்ளிட்ட குதிரை பேரங்கள் நடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் பலர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் நடைபெற்ற 18 கவுன்சிலர்களுக்கான தேர்தலில் தி.மு.க., 11, அ.தி.மு.க., 5, பா.ம.க., 2, வெற்றி பெற்றுள்ளனர். ஜோலார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ., வும், திருப்பத்துார் மாவட்ட செயலாளருமான தேவராஜின் மருமகள் காயத்திரி என்பவருக்கும், வெள்ளக்குட்டையை சேர்ந்த பாரி என்பவரது மனைவி சங்கீதாவும் ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிப்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
காயத்திரிக்கு 5 கவுன்சிலர்களும், சங்கீதாவுக்கு 6 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்கள் ஆதவை பெற்றால் தான் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் காயத்திரியும், சங்கீதாவும் அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்கள் 7 பேரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் 18 கவுன்சிலர்களும் பதவி ஏற்று கொண்டார்கள். சங்கீதாவுக்குஆதரவு அளிப்பதாக சொன்ன 6 கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க., வை சேர்ந்த 7 கவுன்சிலர்களையும் சங்கீதாவின் ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிச் சென்றனர்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த திமுக மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ., வுமான தேவராஜ் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் அடிதடி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
ஆலங்காயம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் தி.மு.க., 11 பேரை பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால் காயத்ரி, சங்கீதாவு ஆகியோருக்குள் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுளளது. இதனால் கடத்தல் நாடகம் நடந்தது. அது பயனளிக்காததால் குதிரை பேரம் நடக்கிறது.தங்களுக்கு ஓட்டு போட்டால் இரண்டு கோடி ரூபாய் தருவதாக இரு தரப்பிலும் பேரம் நடப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
ஆலங்காயம் தி.மு.க., வினர் கூறியதாவது: மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ., வுமான தேவராஜி அராஜமாக செயல்படுகிறார். ஒன்றயக்குழு தலைவர் பதவியை தன் மருமகளுக்கு கிடைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல் ஆகியோர் சங்கீதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.இதனால் இங்கு தி.மு.க., வில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.