விடியா திமுக ஆட்சியில் கோயில் நிலங்களை விற்க முடிவு: கடும் எதிர்ப்பு !


பொது நோக்கம் கருதி அரசுக்கோ, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கோ கோயில் நிலங்களை விற்கலாம் அல்லது குத்தகைக்கு விடலாம் என்று அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டிருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகளும், ஹிந்துக்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஹிந்துக் கோயில்கள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு வந்தன. ஆனால், இதை பொறுக்க முடியாத தி.மு.க. அரசு, ஹிந்து கோயில்களின் வருவாயை சுருட்ட முடிவு செய்தது. இதையடுத்து, கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி இந்து சமய அறநிலையத்துறை என்கிற பெயரில் ஒரு துறையை ஏற்படுத்தி, நல்ல வருமானம் வரும் ஹிந்துக் கோயில்கள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இதற்கு, அப்போதே ஹிந்துக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், எந்த பயனும் இல்லை.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 30,000-க்கும் மேற்பட்ட ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றன. இக்கோயில்களுக்கு மன்னர்கள் காலம் முதல் பல்வேறு செல்வந்தர்கள் வரை பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள், நிலங்கள் தானமாக வழங்கி இருக்கிறார்கள். ஆனால், இக்கோயில் நிலங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது பற்றி முறையான ஆவணங்கள் இல்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி, மேற்கண்ட நிலங்களை புறம்போக்கு நிலங்களாகக் கருதி அரசு நிறுவனங்களே ஆக்கிரமித்து பஸ் ஸ்டாண்டுகள், அலுவலகங்களை அமைத்து வருகின்றன. அதேபோல, ஏராளமான இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கின்றன.

இப்படிப்பட்ட நிலங்களை நீதிமன்றம் வரை சென்று போராடித்தான் இந்து சமய அறநிலையத்துறை மீட்க வேண்டிய நிலை இருக்கிறது. சமீபத்தில் கூட சென்னையில் தனியார் ஒருவர் ஆக்கிமித்து குயின்ஸ் லேண்ட் என்கிற பெயரில் ‘தீம் பார்க்’ அமைத்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஹிந்து கோயில்களை விடுவித்து ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கை ஹிந்துக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த நிலையில்தான், பயன்படுத்த முடியாத மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் பயன்பாட்டில் உள்ள இடங்களை, பொது நோக்கத்திற்காக விற்கலாம் அல்லது குத்தகைக்கோ, வாடகைக்கோ விடலாம் என்று அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் கோயில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதுதான் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மசூதிகளும், கிறிஸ்தவ சர்ச்களும் எப்படி அச்சமுதாய மக்கள் கையில் சுதந்திரமாக இயங்குகிறதோ, அதேபோல, ஹிந்துக் கோயில்களையும் ஹிந்துக்களிடம் ஒப்படைத்து சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹிந்து கோயில் நிலங்களை விற்கலாம் என்று அறநிலையத்துறை ஆணையர் அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கண்டனக்குரல் எழுப்புகிறார்கள்.

Exit mobile version