பசுவை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே சில குழுக்கள் பசுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் செயல்படுகின்றன. பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48வது பிரிவானது பசுக்கள், கன்றுகள், இதர கறவை மற்றும் இழுவை கால்நடைகளைக் கொல்வதைத் தடை செய்கின்றது. அக்டோபர் 26, 2005 அன்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்தியாவில் பல்வேறு மாநில அரசாங்கங்களால் இயற்றப்பட்ட பசுவதைத் தடை சட்டங்கள் செல்லும் என உறுதிபடுத்தியது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பசு தடைவதை சட்டம் இருந்த போதிலும், மகாராட்டிரா, குஜராத்,இராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் பசு, எருமை மற்றும் காளைகளை முற்றிலும் வதை செய்ய அனுமதிக்காத மாநிலங்கள் ஆகும்.
இந்த நிலையில் இந்திய காலாசாரத்தின் அடையாளமாக திகழும் பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க, ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரின் ஜாமின் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் அளிக்க மறுத்து உத்தரவிட்ட நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறியதாவது:
பசு வதைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். பசுவுக்கு அடிப்படை உரிமை வழங்கும் மசோதவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். மேலும், இந்திய கலாசாரத்தின் அடையாளமாக திகழும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.
பசு பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தது அல்ல. நாட்டு மக்கள் அனைவருமே பசுவை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.