மக்களை பிச்சைகாரர்கள் என்று கூறிய தயாநிதி மாறனுக்கு தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன் கடும் கண்டனம்…

தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் . ஸ்ரீநிவாசன் இன்று தமிழக பத்திரிக்கை யாளர்களுக்கு   காணொலிக் காட்சி மூலம் பேட்டி அளித்தார்.

அதில் திமுக-வைச் சேர்ந்த தயாநிதி மாறனின் பொறுப்பற்ற பேச்சுக்கு பதில் அளித்து பேசுகையில்: “உலகினை அச்சுறுத்தும் கொரோனா நோயினால் 700 கோடி மக்களும் ஒரு உலகப் போரை எதிர் கொள்வது போல் அவதியுறும் இவ்வேளையில், திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் பொறுப்பற்ற முறையில், நிவாரண உதவி கோருவதை கொச்சைப்படுத்தி, ஏளனம் செய்து, பிரதமரையும், தமிழக முதல்வரையும், மக்களையும் பிச்சைக்காரர்கள் என்று நாக்கு தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார்.

இது நல்லதல்ல.  இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு, பாஜக சார்பில் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.திமுக ஆட்சி செய்த போது, கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, அவர் பொது மக்களிடம் நிவாரணம் கோரிய பல முன் உதாரணங்கள் உண்டு. அப்படி என்றால் கருணாநிதி பிச்சைக்காரரா ? அல்லது அவர் முதலமைச்சராக இருக்கும் பொழுது தமிழக மக்களைப் பிச்சைக்காரர்களாக வைத்திருந்தாரா?

இருப்பவர்களிடம் இருந்து நிதி பெற்று இல்லாத மக்களின் நலனுக்காக பாரத பிரதமரும், தமிழ்நாட்டு முதல்வரும் மக்களிடம் நிதி பெறுவதை பிச்சை எடுப்பதாக தயாநிதி மாறன் நினைத்தால், அப்படி பிச்சை எடுப்பதில் தவறில்லை. ஆனால் திமுக போல் மக்களிடம் கொள்ளை அடிக்கும் இடத்தில் தான் இருக்க கூடாது.

மக்களின் சொத்தை கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம், ஆட்சி அதிகாரத்தின் மூலம் கொள்ளையடித்த கூட்டம், மக்களுக்கு நிவாரண உதவி கேட்பதை பிச்சை எடுப்பதாக பேசுவது ஆணவத்தின் அறிகுறி. தயாநிதி மாறனுக்கு, வாக்குப் பிச்சை போட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழக மக்களை கொச்சைப்படுத்தலாமா?

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் உட்பட உலகின் 55 நாடுகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து அனுப்பி வைத்தவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்.

நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசியக் கொடிக்கு ஒளிஒலி காட்சி  மூலம் தனது நன்றியை தெரிவித்திருக்கிறது அந்த தேசம்.

இமயமலையை ஆல்ப்ஸ் மலை வணங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு மகா கேவலமானது.தயாநிதி மாறன் தனது தவறை உணர்ந்து, அவர் பயன்படுத்திய அநாகரிகமான வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, தனது கட்சித் தலைவர்கள் இது போன்று பொறுப்பற்ற முறையில் பேசுவதைத் தடுக்க வேண்டும், எனக் கூறினார்.

கட்டுரை :- நன்றி மேரு நியூஸ்.

Exit mobile version