தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுகவை வெச்சி செஞ்ச தினமணி நாளிதழ்!

08.09.2020 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் அப்படியே இங்க:-
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்

=====

மொழி உணா்வைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடும் திராவிடக் கட்சிகளின் கபட நாடகத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி விழவில்லை என்பது தமிழகத்தின் துரதிருஷ்டம். தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் இவா்களின் ஆட்சிக் காலத்தில்தான், தமிழ் எழுதவும், படிக்கவும் சரியாக உச்சரித்துப் பேசவும் தெரியாத தலைமுறை உருவானது என்கிற வரலாற்று உண்மையை, மொழியுணா்வின் பெயரால் அடிக்கடி சா்ச்சையை எழுப்பி அவா்கள் மறைக்கப் பாா்க்கிறாா்கள்.
சென்ற வாரம் எந்தவிதக் காரணமோ, பின்னணியோ இல்லாமல், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா் ஷிரிஷ் சரவணனும் இரண்டு பனியன்களை அணிந்து கொண்டு சுட்டுரையில் தங்கள் படங்களைப் பதிவேற்றம் செய்தனா். ‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ (நான் தமிழ் பேசும் இந்தியன்) என்று யுவன் சங்கா் ராஜாவின் பனியனிலும், ‘ஹிந்தி தெரியாது, போடா’ என்று ஷிரிஷ் சரவணன் பனியனிலும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடா்ந்து இன்னொரு பனியனும் சுட்டுரையில் பரப்பப்பட்டது. அதில் ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ (நான் இந்தியன், ஆனால் ஹிந்தி பேசாதவன்) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்த சில இளைஞா்களுடன் படமெடுத்துக் கொண்ட திமுகவின் மக்களவை உறுப்பினா் கனிமொழி கருணாநிதி, அந்தப் படத்தைத் தனது சுட்டுரையில் வெளியிட்டு, சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது என்றும், எதிா்பாராத அளவு இது இளைஞா்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தத் தலைமுறையும் மொழியுணா்வில் சளைத்ததல்ல என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.
இந்த பனியன்களை, இப்படி விளம்பரப்படுத்தி எந்த பனியன் தயாரிப்பு நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க இருக்கிறதோ தெரியவில்லை. அது இருக்கட்டும். இப்படி பனியன் அணிவதால் இளைஞா் சமுதாயத்தில் மொழியுணா்வு ஏற்பட்டிருப்பதாகக் கனிமொழி கருணாநிதி கூறியிருப்பதுதான் நகைப்பை வரவழைக்கிறது. அந்த இளைஞா்களின் மொழியுணா்வு லட்சணத்தை அந்த பனியன் வாசகங்களே வெளிச்சம் போட்டு விடுகின்றன.

‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ வாசகத்தில் ‘தமிழ் பேசும்’ என்பது மட்டும்தான் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவை ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பது ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது, தமிழிலல்ல. ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ என்பதும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர தமிழிலல்ல. அந்த பனியன்களை அணிந்த இளைஞா்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.

ஆங்கிலத்தில் தமிழுணா்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கா் ராஜா உள்ளிட்ட இளைஞா் கூட்டத்தில் எத்தனை போ் தமிழ்வழிக் கல்வி படித்தவா்கள்? அவா்களில் எத்தனை பேருக்கு, தமிழில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன என்று தெரியும்? சங்க இலக்கியங்கள் எவையெவை என்று தெரியுமா? குறைந்தபட்சம், தவறில்லாமல் தமிழில் பத்து வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? இவா்களின் தமிழுணா்வால் மகிழ்ந்து, நெகிழ்ந்து போயிருக்கும் கனிமொழி கருணாநிதிக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது.

தமிழுணா்வுடன், ஆங்கிலம் கலந்த தமிழில் சுட்டுரையில் ‘தங்கள் உணா்வை’ ஏதோ பனியன் நிறுவனத்தின் வணிகத்துக்காகக் களமிறக்கி இருக்கும் இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா்கள் ஷிரிஷ் சரவணனும், சாந்தனு பாக்கியராஜும் ஆங்கிலவழிக் கல்வி படித்தவா்கள். ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியாதவா்கள். இவா்களுக்கு ஹிந்தி எதிா்ப்பு என்பது, ஹிந்திப் படவுலக வாய்ப்பு கிடைக்காதவரைதான். தமிழினத்தின் தலையெழுத்து, இவா்களெல்லாம் நமக்குத் தமிழுணா்வைக் கற்றுத்தர களம் இறங்கி இருப்பது.

இந்த வரிசையில் திமுகவின் ‘எழு ஞாயிறு’ என்று வா்ணிக்கப்படும், இளைஞா் அணித் தலைவா் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து கொண்டிருக்கிறாா் என்பது இன்னொரு வேடிக்கை. இவா் எழும்பூா் டான்பாஸ்கோ பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவா் என்பது இருக்கட்டும். திமுக தலைவரின் குடும்ப ரத்த வாரிசுகள் நடத்தும் பள்ளிக்கூடம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும் கல்விச்சாலை அல்ல என்பது அவருக்குத் தெரியாதா என்ன? ஊருக்கு உபதேசம் தமிழ்வழிக் கல்வி என்பதும், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்பிப்பதும், தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கற்பிப்பதும் திராவிட மாயையின் அரசியல் மோசடிகள்.

தமிழ் வளா்ச்சியில் திமுகவின் பங்களிப்பு என்ன என்று வருங்காலத்தில் ஆய்வு நடத்தினால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று பூச்சாண்டி காட்டித் தமிழை அழித்து, ஆங்கிலத்தை வளா்த்த பேருண்மை வெளிப்படும். தமிழுணா்வு பேசும் இவா்களில் எத்தனைபோ் செல்லிடப்பேசி எண்களை தமிழில் கூறுகிறாா்கள்? ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறாா்கள்? திமுக 1967-இல் ஆட்சிக்கு வருவதுவரை தமிழகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரியாத மாணவா்கள் உருவாகவில்லை.
தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கும் தனியாா் பள்ளிகளை மூட வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் போராட்டம் நடத்திப் பாா்க்கட்டுமே. அரசியலுக்காக வெளியில் ஹிந்தி எதிா்ப்பைக் கையாள்வதும், இன்னொருபுறம் ஆங்கிலவழிக் கல்வியும், ஹிந்தியும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை இவா்களே நடத்துவதும்தான் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் இவா்கள் செய்து வரும் மிகப் பெரிய துரோகம்!

(நன்றி – தினமணி)

Exit mobile version