மாநிலங்களில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து என். கே. சிங் தலைமையிலான நிதிக்குழுவும் அதன் உறுப்பினர்களும் மூத்த அதிகாரிகளும் மத்திய மின்துறை அமைச்சர் ஆர். கே. சிங் தலைமையிலான மின்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இன்று விரிவான சந்திப்பை மேற்கொண்டனர். இந்த சந்திப்பு நிதி ஆணையம் 2020 – 2021 நிதியாண்டிற்கான தனது அறிக்கையில் மின்துறை குறித்து வழங்கியிருந்த பரிந்துரைகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான ஊரடங்கில் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவை எதிர்த்துப் போராட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து தவணைகளாக நிதியுதவி பற்றி அறிவித்ததில் முதல் தவணையில் இடம் பெற்றிருந்த 15 நடவடிக்கைகளில், நிதிநிலைமை மிக மோசமாக மாறியுள்ள மின்பகிர்வு நிறுவனங்களில் ரூ. 90,000 கோடி ரொக்கத் தொகை ஈடுபடுத்தப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டும், 2021 – 2026 நிதியாண்டு காலப்பகுதிக்கான நிதிக்குழுவின் அடுத்த அறிக்கையில் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது. மின் துறையை தொடர்ந்து நெருக்கடியிலேயே ஆழ்த்தி வரும் பிரச்சினைகளை கணக்கில் கொண்டு மின்துறையில் சீர்திருத்தங்களை மேலும் வேகப்படுத்துவதற்கு பிரதமர் முன்னுரிமை அளித்துள்ளதை பிரதிபலிப்பதாகவே நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகள் இருந்தன.
மின்துறை தொடர்பாக மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள், இதன் விளைவாக ஏற்படும் நிதிரீதியான பின்விளைவுகள், இதன் விளைவாக மின்பகிர்மான நிறுவனங்கள் நட்டத்தில் ஆழ வேண்டிய நிலை ஆகிய மின் அமைப்பின் கட்டமைப்புகளில் தற்போது நீடித்து வரும் பொருத்தமின்மையை மத்திய மின்துறை அமைச்சர் நிதிக்குழுவிடம் சுட்டிக் காட்டினார். முற்றிலும் மாநில அரசுகளுக்கே சொந்தமான மின்பகிர்வு நிறுவனங்களின் நிதிசார் நலன்களுக்கு மாநில அரசுகள் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கென மாநில அரசுகளின் இந்தப் பொறுப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையில் நிதிசார் பொறுப்புகள் மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் கடன் வாங்கும் அளவு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது.
மின்பகிர்வு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ள மாநில அரசுகளின் பொறுப்புகளை இது முன்னுக்குக் கொண்டு வரும். மேலும் மின்பகிர்வு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் நிதி ரீதியாகவும் மேலாண்மை ரீதியாகவும் மாநில அரசுகள் பொறுப்பாக நடந்து கொள்வதற்கும் நிதிசார்ந்த வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவும் இந்த நடவடிக்கைகள் உதவி செய்யும்.
மின்பகிர்வு நிறுவனங்களின் செயல்பாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கென மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்தும் அமைச்சர் நிதிக்குழுவிடம் விளக்கினார். அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதிய கட்டணக் கொள்கையும் இதில் அடங்கும். மின்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பாதையை உருவாக்கவுள்ள சீர்திருத்தங்களில் இதுவும் அடங்கும். 2003ஆம் ஆண்டின் மின்சார சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சகத்தின் பழைய திட்டங்கள் அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு புதியதொரு திட்டமாக உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர் இதற்கென ஐந்தாண்டு காலப்பகுதிக்கு தேவைப்படும் ரூ. 3 லட்சம் கோடியை ஒதுக்கும் வகையில் நிதிக்குழு தனது ஆதரவை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திருத்தி அமைக்கப்படும் இத்திட்டமானது இழப்புகளைக் குறைப்பது, விவசாயத்திற்கான வழங்கல் முறைகளை தனியாக மேற்கொள்வது, முன்கூட்டியே நுகர்வுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையிலான நவீன அளவிகள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
மின்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகளுக்கான மின்துறை அமைச்சரைப் பாராட்டிய நிதிக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் ஒழுங்குமுறையை பின்பற்றுதல், நிதிசார்ந்த ஒழுங்கமைவு, சீர்திருத்தங்கள் தொடர்ந்து நீடித்து இருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து மின்துறை அமைச்சகத்திற்கு பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கினர்.
15வது நிதிக்குழு 2020-21ஆம் நிதியாண்டிற்கான தனது அறிக்கையில் 2016-17ஆம் நிதியாண்டில் மின்துறை பகிர்வு நிறுவனங்களுக்கான உறுதித்திட்டத்தை (உதய் திட்டம்) அமலாக்கிய பிறகு பெரும்பாலான மாநிலங்கள் தங்களது சராசரி தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்புகளையும், மின் வழங்கலுக்கான சராசரி மதிப்பு மற்றும் பெறக்கூடிய சராசரி வருவாய் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளையும் இழப்புகளையும் ஓரளவிற்கு குறைத்துள்ளன என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். எனினும் மின்துறையில் நிலவிவரும் அமைப்புரீதியான பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்தவில்லையெனில் இத்துறையில் ஏற்பட்டுள்ள் முன்னேற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது. இதன் விளைவாகவே மின்துறையின் செழிப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான துடிப்பான, அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று மின்துறை அமைச்சரும் நிதிக் குழுவும் கருத்து தெரிவித்தனர்.
தங்களது எதிர்கால விவாதங்களின் போதும் தனது இறுதி அறிக்கையை உருவாக்கும் போதும் மின்துறை அமைச்சகம் முன்வைத்த ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளும் எனவும் நிதிக்குழு உறுதி கூறியது.