போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான, தி.மு.க., முக்கிய புள்ளி உள்ளிட்ட நான்கு பேரின், 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம், 53. இவர் தி.மு.க.,வில், ராமநாதபுரம் மாவட்டசென்னையைச் சேர்ந்த மன்சூர், 41; ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரஹ்மான், 39 ஆகியோருடன் சேர்ந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.இவர்கள் மூவரும், கடந்தாண்டு ஜூலையில் மணிப்பூரில் இருந்து, மெத் ஆம்பெட்டமைன், ஆம்பெட்டமைன் போதைப் பொருட்களை கடத்தி வந்து, சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் பதுக்கி வைத்திருந்தனர்.
அங்கிருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைனுடன், பஸ் பயணியர் போல, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்த இருந்தனர்.அவர்களை, என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் மணிப்பூரில் இருந்து மெத்ஆம்பெட்டமைன் கடத்தி வந்து, இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரியவந்தது.செய்யது இப்ராஹிம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தார். இவரிடம் இருந்து ஹவாலா பணம், 7 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது, என்.சி.பி., அதிகாரிகள், செய்யது இப்ராஹிம், ரஹ்மான், மன்சூர் ஆகியோருக்கு சொந்தமான, 1.47 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளனர்.அதேபோல, 2023ல், சென்னை எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில், ௧ கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள், 8 சவரன் தங்கம், 50,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தெலுங்கானாவில் இருந்து, போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின், 12 லட்சம் ரூபாய் என, இரண்டு வழக்குகளிலும், 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கி உள்ளனர்.