சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3வது நாளாக நேற்று இரவும் பயணிகள்பேருந்து இல்லாமல் தவித்தனர். பலரும் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால் மதுராந்தகம் பால பணி காரணமாக பல பேருந்துகள் வெகு தாமதமாகவே வந்தன. இதனால் பயணிகள் பலர் முண்டியடித்து ஏறினார்கள். பேருந்தில் இடம் பிடிக்க ஜன்னல் வழியாக பயணிகள் ஏறுவதையும் காண முடிந்தது. ஊருக்கு செல்ல ஆசையுடன் வந்த பயணிகள் கிளாம்பாக்கத்தில் கடும் சிரமங்களை சந்தித்தனர்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் பேருந்து குறைவாக இயக்கப்படுவதாக தொடர்நது குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சென்னையின் மையப்பகுதியில் உள்ள மக்கள், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கிளம்பி வந்து கிளாம்பாக்கத்திற்கு சேருவதற்கு 2 மணி நேரம் ஆகி விடுகிறது. மேலும்இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே கிளம்பாக்கத்தை அடைவதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. பேருந்து நிலையிம் திறக்கப்பட்டதிலிருந்தே இந்த நிலைமை தான்.
கிளம்பாக்கத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் ஓரளவே இருக்கின்றன. குறிப்பாக 12 மணிக்கு மேல் பேருந்துகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதேநேரம் அரசு வார இறுதி நாட்களை பொறுத்தவரை சிறப்பு பேருந்துகளை இயக்குவதும் வழக்கம். அதேபோல் பயணிகளின் கூட்டத்தை பொறுத்து உடனடியாக சிறப்பு பேருந்துகளையும் அறிவிப்பது வழக்கம்.
ஆனால் கடந்த இரண்டு நாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவு 1 மணியளவில், புறப்பட்ட ஒரு சில பேருந்துகளையும் சிறை பிடித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலையில் 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலை மறியல் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிமீ தொலைவுக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், இரவில் பெருமாள் வீதி உலா வரும்போது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்தை தடை செய்து, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் பேருந்து நிலையத்துக்குள் வர வேண்டிய பேருந்துகள் கால தாமதமானதாலும், நள்ளிரவு நேரம் என்பதால் உடனடியாக போக்குவரத்து ஏற்பாடு செய்ய இயலாமல் இருந்தது. அன்றைக்கு பொதுமக்களை ஒருவழியாக சமாளித்து பேருந்துகளை இயக்கி போலீசார் அனுப்பி வைத்தனர்
மூன்றாவது நாளாக சிக்கல்
இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும, மூன்றாவது நாளாக நேற்றும் பேருந்துகள் தாமதமாக வந்த காரணத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பாலப்பணிகளால் பேருந்துகள் சென்னைக்கு வருவதில் தாமதமும் பயணிகள் கூட்டம் அதிகரிக்க காரணமானது. மதுராந்தகம்- மேல்மருவத்தூர் இடையே கருங்குழி உள்ளிட்ட இரு இடங்களில் பாலப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் நீண்ட நேரம் தாமதமாக வருகின்றன. இதனால் பயணிகள் நேற்று கடும் அவதி அடைந்தனர்.
பயணிகள் கோரிக்கை
நேற்று இரவு பேருந்துகள் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நள்ளிரவில் பேருந்துகளில் ஏறி இடம் பிடிக்க படாதபாடு பட்டனர். பலர் ஜன்னல் கம்பி இடையில் ஏறி பேருந்துகளில் இடம் போட முயன்றனர். நள்ளிரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், சென்னையில் இருந்து கிளம்பி கிளாம்பாக்கம் வர நள்ளிரவு ஆகிவிடுவதால், நள்ளிரவில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.ஆனால் விளம்பர மாடல் அரசு போல் போட்டோ சூட்டுக்கு கிளம்பிவிட்டது.