தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளது:-
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவைச் சேர்ந்த, உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் பெருகியிருக்கும் போதைக் கலாச்சாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கூட்டுப் பாலியல் பலாத்காரம் போன்ற மிக மோசமான குற்றம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமல், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், தமிழகக் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் புழக்கத்திற்கும், ஆளுங்கட்சியினர் என்பதற்காகக் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், ஒரு சமூகமாக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகப் பெரியது என்பதை முதலமைச்சர் எப்போது உணர்வார்?
என அவர் பதிவிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















