சீனியர்களை ஓரம் காட்டினால் சேதாரம் அதிகம்.. தேர்தலுக்கு முன்னே சொல்லிருக்கலாம்ல…. வீதிக்கு வந்த திமுக சண்டை..

திமுகவில் சீனியர்களை உதயநிதி ஸ்டாலின் ஓரம்கட்ட நினைக்கிறார் என்றும், திமுக தலைமையின் விருப்பத்தை ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி. சீனியர்களை வம்படியாக ஒதுக்க நினைத்தால் சேதாரம் பெரிதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். அவரது பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்.

சென்னையில் சமீபத்தில் நடந்த திமுக அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயத்தால் பெரும் களேபரம் ஏற்பட்டது. ஓல்டு ஸ்டூடண்ட்ஸ் வகுப்பை விட்டு செல்லாமல் இருக்கிறார்கள், அவர்களை சமாளிப்பது கடினம் என திமுகவில் இருக்கும் சீனியர்கள் பற்றி பேசினார் ரஜினிகாந்த். இதற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக பேச முடியாமல் ரஜினியை வைத்து திமுகவில் உள்ள சீனியர்களை ஓரங்கட்ட நினைக்கிறார் என பேச்சுக்கள் எழுந்தது. மூத்த பத்திரிகையாளர் மணி கூறுகையில், “திமுகவில் சீனியர்களை ஓரங்கட்ட கட்சி தலைமை விரும்புவது தெளிவாகத் தெரிகிறது. ரஜினிகாந்த், திமுக தலைமை சொல்லிக் கொடுத்து பேசினாரா என்பதை தாண்டி, ரஜினி பேசியதை திமுக தலைமை ரசிக்கிறது என்பதற்கு 3 உதாரணங்களைச் சொல்ல முடியும். ரஜினிகாந்த் பேச்சை முதல்வர் ஸ்டாலின் என்றைக்கும் இல்லாத அளவுக்கு ரொம்பவே சிரித்து ரசித்தார்.

ரஜினிகாந்த் எந்த யோசனையும் சொல்லாதபோதே, உங்கள் யோசனையை ஏற்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். சீனியர்களுக்காக வாதாடவில்லை. சீனியர்கள் சீட்டை பிடித்திருப்பதாக ரஜினி பேசுவதை ஏற்பதாகச் சொல்கிறார் ஸ்டாலின். அடுத்த நாள் திமுக பொறியாளர் அணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகி புதியவர்களின் கை பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்.

இவர்களின் ஆசிர்வாதத்தோடு தான் ரஜினி பேசி இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. ரஜினிகாந்த் பேச்சை முரசொலி தலையங்கமும் ஆதரித்து எழுதுகிறது. யார் சொல்லி ரஜினி இப்படி பேசினார் என்பதை இதன் மூலமாகவே புரிந்து கொள்ளலாம். திமுகவில் சீனியர்களை ஓரங்கட்டுவது பெரிய பிரச்சனையாகவே எழுந்து உள்ளது.

திமுகவின் அடுத்த முகம் உதயநிதி ஸ்டாலின் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. விஜய் அரசியலுக்கு வரும் நேரத்தில், இனி சீனியர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது, தனக்கு ஒரு இளம் படை வேண்டும் என்று உதயநிதி நினைக்கிறார். ஆனால், இந்த சீனியர்கள் தான் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்றிருக்க முடியாது.

திருச்சியில் தனி சின்னத்தில் நின்ற துரை வைகோ, கே.என்.நேரு இல்லாமல் ஜெயித்திருக்க முடியாது. திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி இல்லாமல் சிபிஐஎம் ஜெயித்திருக்க முடியாது. இன்று சீனியர்கள் வழிவிட வேண்டும் என பேசும் உதயநிதி கடந்த பிப்ரவரி மாதம் இதை பேசி இருக்கலாமே?

திமுகவை பொறுத்தவரை சீனியர்கள் குறுநில மன்னர்கள் தான். அதிமுகவில் ஜெயலலிதா யாரை வேண்டுமானாலும் அமைச்சரவையில் இருந்து தூக்குவார்.. ஏன் கட்சி பதவியையும் கூட பறிப்பார். ஆனால் திமுகவில் ஒரு அமைச்சரின் பி.ஏவை கூட மாற்ற முடியாது. இதுதான் திமுகவின் கட்சி அமைப்பு. இப்படி இருக்கும்போது ஒரே இரவில் சீனியர்களை தூக்கி வீச நினைத்தால், கட்சி அதற்குரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும். என பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version