‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு, 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று கூறிவிட்டு, அதை செயல்படுத்தாமல் மின் கட்டணத்தை யூனிட்டிற்கு, 70 காசு உயர்த்தியுள்ளது.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல், நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள், 59 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்திய பின் தான், நெசவுக்கு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு மூடுவிழா நடத்த, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. தலா, 1.80 கோடி சேலைகள், வேட்டிகளை நெய்ய, நுால் கொள்முதலுக்கு, ‘டெண்டர்’கள் கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
நுால் வழங்கிய பின், மொத்த ஒப்பந்தத்தை முடித்து கொடுக்க, குறைந்தது ஐந்து மாதங்களாகும். அதற்கு ஒரு சேலைக்கு, 200 ரூபாயும்; ஒரு வேட்டிக்கு, 70 ரூபாயும் நெய்ய கூலியாக அரசு வழங்க வேண்டும். இப்போது, டெண்டர் கொடுப்பதில் தாமதம் ஆவதால், நெசவாளர்களுக்கு, 486 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த டெண்டரை வழங்கவில்லை எனில், பா.ஜ., மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
SOURCE DINAMALAR