விடியல் பரிதாபங்கள் ! கொலை வழக்கு போடுங்க.. கண்ணீருடன் இளைஞரின் குடும்பம்..

சென்னையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில்,சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்த உறவினர்களான விக்னேஷும், சுரேஷும் கடந்த 18-ந் தேதி ஆட்டோவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது கெல்லீஸ் சந்திப்பில் அவர்கள் சென்ற ஆட்டோவை வழிமறித்த போலீசார், கஞ்சா, கத்தி வைத்திருந்ததாக கூறி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில், விக்னேஷ் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், விக்னேஷை காவல் துறையினர் தாக்கி அடித்து துன்புறுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு தெரிவித்திருக்கிறார். மேலும், சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தை சிபிசிஐடி கையில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் தலைமைச் செயலக காலணி காவல் நிலைய காவலர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்னேஷின் சகோதரர், தனது தம்பி விக்னேஷ் மெரினாவில் குதிரை ஓட்டும் தொழில் செய்து வந்ததாகவும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தவுடன் அதனை மறைக்க ஆயிரம் விளக்கு மற்றும் பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்கள் இருவரும் தன்னையும், தனது மற்ற தம்பிகளையும் அழைத்துச் சென்று பணம் கொடுத்து பேரம் பேசியதாக கூறியிருக்கிறார். மேலும், காவல்துறையினர் கொடுத்ததாக கூறப்படும் பணத்தையும் அவர் செய்தியாளர் சந்திப்பில் காண்பித்தார்.

இறுதிவரை விக்னேஷின் முகத்தை சரியாக கூட பார்க்கவிடாமல், காவல்துறையினரே இறுதி சடங்கு செய்துவிட்டதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளானர்.

விசாரணை கைதியின் மரண வழக்கில் பிரேத பரிசோதனையின் போது பின்பற்றப்பட வேண்டிய உயர்நீதிமன்றத்தின் விதிமுறைகள் எதுவும் விக்னேஷின் மரணத்தில் பின்பற்றப்படவில்லை என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இவ்வழக்கின் முக்கிய சாட்சியான காவலர்கள் தாக்கியதை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

நன்றி:-polimer.

Exit mobile version