திமுக நிர்வாகியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் கன்னிகாபுரம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி. திமுக பிரமுகரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான முரளி, லட்சுமியின் கணவர்.
இந்த ஊரின் சுடுகாடு நிலத்தை திமுக நிர்வாகி முரளி ஆக்கிரமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ஊர் பொதுமக்கள் முரளியிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு, முரளியின் சகோதரர் வேலு மற்றும் அவரது ஆதரவாளர்கள், செந்தில்குமார் மற்றும் உதயா ஆகிய இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
திமுக நிர்வாகி முரளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வெங்கல் காவல்நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், முரளியின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் கடந்த 14-ஆம் தேதி திருவள்ளூர் – நெடுங்குன்றம் சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முரளியின் சகோதரர் வேலுவைக் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த முரளி, அவரது மனைவி லட்சுமி, மாமியார் ஆகியோர் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி பிரியாவை அழைத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மனமுடைந்த பிரியா, வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திமுக நிர்வாகி குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை பிரியா உடல் அடக்கம் நடைபெறாது என கிராம மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர். ஆனால் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து பிரியாவின் இறுதிச் சடங்குகள் நடந்தன.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, அவரது கணவர் திமுக நிர்வாகி முரளி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்டோர் மீது வெங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.