போதைப்பொருள் கடத்திய நபர் கொடுத்த தகவலின் பேரில் தி.மு.க. ஊராட்சி தலைவர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். காருக்குள் போதைப்பொருள் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள ‘ஐஸ் மச்சா’ என்ற போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், காரில் வந்த நபரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.வீட்டில் சோதனை விசாரணையில் அவர், அந்த போதைப்பொருளை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்கு எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுெதாடர்பாக போலீஸ் ஐ.ஜி., நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், விழுந்தமாவடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரது வீட்டில் எதுவும் சிக்கவில்லை.
ஊராட்சி தலைவர், மகன் கைது இருந்தபோதிலும், மகாலிங்கம்(வயது 55), அவரது மகன் அலெக்ஸ்(30) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் பலத்த பாதுகாப்புடன், சென்னையில் இருந்து கடலூர் வந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள மகாலிங்கம் தி.மு.க.வை சோ்ந்தவர். மேலும் இவர் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். தி.மு.க.வை சோ்ந்த இவரது மகன் அலெக்ஸ் கீழையூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.